புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்லும் வழியில் கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா மற்றும் நமீபியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை பயணம் மேற்கொள்கிறார். பிரேசிலில் உச்சி மாநாட்டு பிரகடனத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா தலைவர்களுடன் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் சுகாதாரம் உட்பட பல துறைகளில் ஒத்துழைப்புடன் செயல்படுவது குறித்து பிரதமர் மோடி ஆலோசிக்கிறார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா,சீனா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரகடனத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்படும்.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செயலாளர் தாமு ராவி கூறுகையில், ‘‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இந்தியா எடுத்த நடவடிக்கையை பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புரிந்து கொண்டுள்ளன. இதில் முரண்பாடு எதுவும் இல்லை. தீவிரவாத அச்சுறுத்தலை எவ்வாறு சமாளிப்பது என்ற புரிதல் உள்ளது. எனவே, பிரிக்ஸ் மாநாட்டு பிரகடனத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான அச்சுறுத்தலை சமாளிப்பது பற்றிய விஷயம் நமக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும்’’ என்றார்.