மதுரை மக்களவைத் தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கை: ரயில்களில் புறநகர் பயணக் கட்டணமும் , சீசன் டிக்கெட் கட்டணமும் உயரவில்லை. ஒரு பயண கிலோ மீட்டருக்கு அரை பைசா, ஒரு பைசா 2 பைசா என கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என அறிவிக்கப் பட்டது. ஆனால், உண்மை நிலவரம் என்ன என்பது புள்ளி விவரங்களைப் பார்த்தால் புரியும்.
2017-2018-ல் 824 கோடி பேரும், 2018 -2019-ல் 846 கோடி பேரும், 2018 -2019-ல் 846 கோடி பேரும் பயணித்துள்ளனர். கட்டண வருமானம் ரூ.45 ஆயிரம் கோடி கிடைத்துள்ளது. ஆனால், 2024- 2025-ல் பயணிகள் எண்ணிக்கை 715 கோடியாக குறைந்துள்ளது. அதாவது 130 கோடி பயணிகள் குறைந்து விட்டனர். ஆனால் வருமானம் ரூ. 45,000 கோடியில் இருந்து ரூ.75,000 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் ரகசியம் என்ன?
முன்பதிவு 68 கோடியில் இருந்து 81 கோடியாக அதிகரித்துள்ளது. ஆனால் முன்பதிவு இல்லா பயணிகளின் எண்ணிக்கை 778 கோடியில் இருந்து 634 கோடியாக குறைந்துள்ளது. இந்த வருமானம் எப்படி அதிகரித்தது. தட்கல், பிரீமியம் தட்கல், டைனமிக் கட்டணம் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு பெட்டியிலும் 30 சதவீதமான படுக்கை வசதிகள் ஒதுக்கப்படுகின்றன. இவை ரூ. 500-க்குப் பதிலாக ரூ.3000-க்கு விற்கப்படுகிறது. வந்தே பாரத், சதாப்தி, அந்தியோதயா என்ற வகைகளில் கட்டண உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
முன்பதிவு இல்லா பெட்டிகளைக் குறைத்தல், சாதாரண ரயில்களை ரத்து செய்தல் போன்றவற்றால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தாலும் வருவாய் அதிகரித்துள்ளது. மறைமுகக் கட்டண உயர்வு மூலம் பயணிகளை சாலைக்கு துரத்துவது என்பது தேச நலனுக்கு விரோதம். கட்டண உயர்வு மூலம் 75 ஆயிரம் கோடி வருமானம் ஈட்டும் ரயில்வே, கண் துடைப்புக்காக குறைந்த கட்டண உயர்வு என்பதை ஏற்க முடியாது. இவ்வாறு கூறியுள்ளார்.