ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை பவானி இறந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அதற்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றுப்படுகையில் நடைபெற்ற யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்துகொள்வதற்காக சென்ற ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் யானை பவானி (62), உடல் நலக்குறைவால் மரணமடைந்தது. பின்னர், ராமேசுவரம் கொண்டுவரப்பட்ட யானையின் உடல், ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ஈஸ்வரி அம்மன் கோயில் தோப்பில் அடக்கம் செய்யப்பட்டது.
பவானி யானையை, ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவன அதிபர் ராமசாமி ராஜாவால் 1960-ம் ஆண்டில் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போதிலிருந்து 50 ஆண்டுகளுக்கும் மேலாக ராமநாதசுவாமி கோயிலில் சேவை புரிந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கியது. பவானி யானை இறந்ததை அடுத்து, யானைக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அறிவித்தது.
அதன்படி, பவானி இறந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், பக்தர்கள் நினைவுகூரும் விதமாக மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சகம் அனுமதி கிடைக்கப் பெற்றதும் திறக்கப்பட உள்ளது.