திருப்புவனம்: போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று வழங்கினார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாவையும் அவர் வழங்கினார்.
முன்னதாக நேற்று அஜித்குமாரின் தாய், சகோதரரிடம் தொலைபேசியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அது தொடர்பான வீடியோவையும் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று (ஜூலை 2) காலையில், அமைச்சர் பெரியகருப்பன் அஜித்குமாரின் சகோதரர் நவீனுக்கு அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கியதோடு அஜித்குமார் குடும்பத்தினரிடம் இலவச வீட்டு மனைக்கான பட்டாவையும் வழங்கினார். நவீனுக்கு ஆவின் நிறுவனத்தில் வேலை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் நிலவுகிறது.
பின்னர் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், “அஜித்குமார் குடும்பத்துக்கு உதவி செய்ய அரசு உத்தரவு பிறப்பிருந்தது. அதன்படி, அஜித்குமாருக்கு அவரது கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது. கூடவே அஜித்குமார் குடும்பத்துக்கான இலவச வீட்டு மனைப் பட்டாவும் வழங்கப்பட்டுள்ளது.” என்றார்.
நடந்தது என்ன? சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
பின்னர் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, அஜித்குமாரை தாக்கிக் கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனிடையே, மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது
தொடர்ந்த இந்த வழக்கில் அரசுக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் செல்போனின் ஆறுதல் தெரிவித்தார்.