மும்பை: கர்நாடகாவின் மங்களூருவை சேர்ந்தவர் பிலால் அகமது டெலி (21). பிளஸ் 2 வரை மட்டுமே படித்துள்ள அவர், இணையதள வடிவமைப்பு தொடர்பாக ஓராண்டு டிப்ளமோ படிப்பையும் நிறைவு செய்துள்ளார். இதன்பிறகு துபாய், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றி உள்ளார்.
தற்போது குஜராத்தின் சூரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பிலால் பணியாற்றி வருகிறார். அவரது மாத ஊதியம் ரூ.1.25 லட்சம் ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்பு மும்பையில் உள்ள ஐஐடி கல்வி நிறுவனத்துக்கு பிலால் சென்றுள்ளார்.
அங்கு தன்னை பிஎச்டி ஆய்வு மாணவர் என்று அறிமுகம் செய்துள்ளார். இதுதொடர்பான போலி ஆவணங்களையும் காண்பித்து உள்ளார். ஐஐடி விடுதியில் தங்கியிருந்து செயற்கை நுண்ணறிவு சார்ந்த வகுப்புகளில் பங்கேற்றுள்ளார்.
இதுகுறித்து மும்பை போலீஸார் கூறியதாவது: கடந்த மே 27-ம் தேதி மும்பை ஐஐடி வளாகத்தில் பிலால் நுழைந்துள்ளார். அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்களை ஏமாற்றி 14 நாட்கள் வரை ஐஐடி வளாகத்தில் அவர் தங்கியுள்ளார். அவர் ஏராளமான செல்போன்களை பயன்படுத்தி உள்ளார். 21 இ-மெயில் முகவரிகளை உருவாக்கி உள்ளார். சில சந்தேகத்துக்குரிய செயலிகளையும் பயன்படுத்தி உள்ளார்.
பிலாலின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெண் ஊழியர் ஒருவர் ஐஐடி நிர்வாகத்திடம் புகார் அளித்து உள்ளார். இதைத் தொடர்ந்து மும்பை ஐஐடியின், அதிவிரைவு குழுவினர் பிலாலை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆண்டு சுமார் ஒரு மாதம் வரை மும்பை ஐஐடி வளாகத்தில் தங்கியிருந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது செல்போன்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டு உள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.