புதுடெல்லி: ஜாம்பியாவில் நிலத்துக்கு அடியில் இருக்கும் தாமிரம், கோபால்ட் தாது படிமங்களை ஆராய புவியியலாளர் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: எரிசக்தி மாற்றத்துக்கு அவசியமான முக்கிய கனிமங்களை பெறுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில் தாமிரம், கோபால்ட் தாது ஆய்வுக்காக இந்தியாவுக்கு ஜாம்பியா அரசு இந்த ஆண்டு 9,000 சதுர கி.மீ. (3,475 சதுர மைல்) நிலம் ஒதுக்க ஒப்புக்கொண்டது.
மின்சார வாகனங்கள் மற்றும் மொபைல் போன்களுக்கான பேட்டரிகளில் ஒரு முக்கிய அங்கமாக கோபால்ட் உள்ளது. இதுபோல் மின் உற்பத்தி, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கட்டுமானத்தில் தாமிரம் பரவலாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த ஆய்வுத் திட்டம் 3 ஆண்டுகள் நீடிக்கும். மேலும் பெரும்பாலான பகுப்பாய்வு இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும். சுரங்கத் திறனை மதிப்பிட்ட பிறகு ஜாம்பியா அரசிடம் இந்திய அரசு சுரங்க குத்தகையை பெறும். இத்திட்டத்தில் பங்கேற்க தனியார் நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.