சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷாவை விமர்சித்த திமுக எம்.பி. ஆ.ராசாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் மதுரை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிரா, டெல்லியைப்போன்று, தமிழகத்திலும் ஆட்சியமைப்போம் என தெரிவித்திருந்தார். இதை கடுமையான சொற்களால் திமுக எம்.பி. ஆ.ராசா விமர்சித்திருந்தார்.
அதற்கு பாஜகவினர் கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு, ஆ.ராசாவைக் கண்டித்து ஜூலை 1-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்திருந்தார்.
அதேநேரம், ஆர்ப்பாட்டத்துக்கு காவல்துறை அனுமதிக்கவில்லை. இந்நிலையில், சென்னை தண்டையார்பேட்டை, கொளத்தூர், அம்பத்தூர், அயனாவரம், சிவானந்தா சாலை, பனகல் மாளிகை, திருவள்ளுவர் நகர் ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக நேற்று மாலை பாஜகவினர் திரளத் தொடங்கினர்.
அப்போது, கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி, கராத்தே தியாகராஜன், வினோஜ் பி.செல்வம், ஏ.என்.எஸ்.பிரசாத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறும்போது, ‘‘போராடக்கூட அனுமதிக்காமல் இருந்தால், தமிழகத்தில் ஜனநாயக முறையில்தான் ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. மத்திய அமைச்சர் அமித் ஷாவை மிக மோசமான வார்த்தையில் திமுக எம்.பி., ஆ.ராசா பேசுவதற்கு திமுக அரசு அனுமதிக்கிறது. அரசு எவ்வளவு அடக்குமுறையை கட்டவிழ்த்தாலும், எங்களது போராட்டம் தொடரும்’’ என்றார்.
இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் வெளியிட்ட அறிக்கையில், “ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, காவல்துறை அதிகாரிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில் முதல்வர் நேரடியாக தலையிட்டு நீதியை நிலைநாட்டாவிட்டால், இந்து மக்கள் கட்சியும் போராட்டக் களத்தில் ஈடுபடும்” என்று கூறியுள்ளார்.