மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.
இந்து முன்னணி சார்பில், மதுரையில் கடந்த 22-ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. அம்மாநாட்டில் அரசியல், மதம், பொது அமைதிக்கு எதிராகப் பேசக்கூடாது என்பன உள்ளிட்ட 52 நிபந்தனைகளை, மாநகர காவல் துறை விதித்திருந்தது. மாநாடு குறித்த வழக்கில், அரசியல் பேசுவது தவிர்க்க வேண்டும் என உயர் நீ்திமன்ற மதுரை அமர்வும் அறிவுறுத்தி இருந்தது. இதையெல்லாம் மீறி, மாநாட்டில் அரசியல் பேசியதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டில் நீதிமன்ற தீர்ப்பை மீறி அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு நிர்வாகி வழக்கறிஞர் வாஞ்சிநாதன், காவல் ஆணையர் லோகநாதனிடம் புகார் அளித்தார். அதன்பேரில், அண்ணா நகர் காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அண்ணாமலை, காடேஸ்வரா சுப்பிரமணியம், இந்து முன்னணி நிர்வாகி செல்வக்குமார் உள்ளிட்டோர் மீது மதம், இனம் என பேசி பகைமையை உருவாக்குதல், மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கில் பேசுதல், மத ரீதியாக புண்படுத்தி பேசுதல், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.