திருப்புவனம்: வருமானம் ஈட்டிய அஜித்குமாரை இழந்ததால், அவரது குடும்பம் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தைச் சேர்ந்தவர் மாலதி. இவர் மதுரை மாவட்டம் சோழவந்தானைச் சேர்ந்த பாலகுருவை திருமணம் செய்தார். இவர்களது மகன்கள் அஜித்குமார், நவீன்குமார். 20 ஆண்டுகளுக்கு முன்னர் பாலகுரு உயிரிழந்த நிலையில், தனது 2 குழந்தைகளுடன் மடப்புரத்துக்கு வந்த மாலதி, உறவினர்கள் ஆதரவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.
இவர் தென்னை தட்டி முடைந்து, 2 மகன்களையும் படிக்க வைத்தார். 10-ம் வகுப்பு வரை படித்த அஜித்குமார், பூக்கடையில் வேலை பார்த்து வந்தார். இவரது தம்பி நவீன்குமார் பொறியியல் படிப்பு படித்துவிட்டு, வேலை இல்லாமல் உள்ளார். இதனால் அஜித்குமார் வருமானத்தில் குடும்பம் நடந்து வந்தது. 2 மாதங்களுக்கு முன்புதான் அஜித்குமார் தனியார் நிறுவனம் மூலம் தற்காலிக காவலாளியாக மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் சேர்ந்தார்.
தற்போது விசாரணை என்ற பெயரில் போலீஸாரின் கொடூர தாக்குதலால் அவர் உயிரிழந்துவிட்டார். இதனால் அவரது குடும்பத்தினர் ஆதரவின்றி தவித்து வருகின்றனர். அஜித்குமார் இறந்த நிலையில், அறநிலையத் துறை சார்பில் கோயிலில் நிரந்தர வேலை மற்றும் நிவாரணத் தொகை தருவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அக்குடும்பத்தை மேலும் சோகப்படுத்தியுள்ளது.
அஜித்குமார் சகோதரர் நவீன்குமார் கூறியதாவது: நான், எனது அண்ணன் அஜித்குமார் உட்பட 5 பேரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். எங்களை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். என்னையும் அடித்தனர். 2 நாட்களாக போலீஸார் அஜித்குமாரை தொடர்ந்து அடித்ததால் சோர்வாக இருந்தார். விசாரணைக்காக எனது அண்ணனை மட்டும் மடப்புரம் கோயிலுக்குப் பின்புறம் போலீஸார் அழைத்துச் சென்றனர்.
அப்போது அவர் நடந்துதான் சென்றார். ஆனால் திரும்பி வரும்போது, அவரை போலீஸார் தூக்கிக் கொண்டு வந்தனர். இதைப் பார்த்த நான், எனது தாயார் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்துக்கு சென்றோம். அங்கு எனது அண்ணன் இறந்துவிட்டதாக கூறினர். இவ்வாறு அவர் கூறினார்.
அஜித்குமாரின் தாயார் மாலதி கூறும்போது, “கோயிலில் பணியில் சேர்ந்து 2 மாதங்கள்தான் ஆகிறது. ஊதியம்கூட வாங்காத நிலையில், எனது மகன் உயிர் பறிபோய் விட்டது. இதுவரை அவன் மீது எந்த வழக்கும் இல்லை. உடல்நலப் பாதிப்பும் இல்லை. இனி என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை” என்றார்.
இதற்கிடையே, ஆதரவற்று தவிக்கும் அவரது குடும்பத்துக்கு அரசு ஆதரவுக் கரம் நீட்ட வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் 24 காவல் நிலையம் மற்றும் போலீஸ் விசாரணை மரணங்கள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்து வருகின்றன. இதனால் இதுபோன்ற மரணங்களைத் தடுக்க முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்தியுள்ளனர்.