சென்னை: காவலர்கள் தாக்குதலில் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்போனின் ஆறுதல் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு. கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
வீடியோவில் இருப்பது என்ன? – அஜித்குமாரின் தாயார் மாலதியிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின், “வணக்கம் அம்மா. இது குறித்து தீவிரமாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளேன். உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துதர கூறியுள்ளேன். அமைச்சர் அனைத்தையும் பார்த்துக் கொள்வார். தைரியமாக இருங்கள்” என்றார்.
பின்னர் உயிரிழந்த அஜித்குமாரின் தம்பி நவீனிடம் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, “தம்பி, நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. தைரியமாக இருங்கள். இது குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறேன். அமைச்சரிடம் சொல்லி அனைத்து உதவிகளையும் செய்ய சொல்கிறேன். தைரியமாக இருங்கள்” என்றார்.
அப்போது முதல்வரிடம் பேசிய நவீன்,”விசாரணைக்கு அழைத்து சென்றுவிட்டு இப்படி ஆகிவிட்டது. அவருக்கு வயது 29 தான் ஆகிறது. எங்க அப்பா சின்ன வயதிலே இறந்துவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு வளர்க்கப்பட்டவர் அவர்” என்றார். அதற்கு முதல்வர், ‘நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள்?’ எனக் கேட்க, ‘நான் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறேன்’ என்றார். பின்னர், முதல்வர், “இதை எப்படியும் ஒத்துக்கொள்ள முடியாது. யாருக்கு என்ன தண்டனை வாங்கி தர முடியுமோ, அதை வாங்கி தருகிறேன். தைரியமாக இருங்கள்” என்றார்.
திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு!
கடமை தவறிக் குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும்! பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும்! pic.twitter.com/YhECfZx6v9
— M.K.Stalin (@mkstalin) July 1, 2025
நடந்தது என்ன? – சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார். கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல் போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர் கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, அஜித்குமாரை தாக்கிக் கொலை செய்ததாக தனிப்படை காவலர்கள் கண்ணன், ஆனந்த், பிரபு, ராமச்சந்திரன், சங்கர மணிகண்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனிடையே, மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மேலும், சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.