புதுடெல்லி: ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட 8 ஆண்டுகளில் 18 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, ஜிஎஸ்டி அமலாக்கப்பட்ட விதத்தைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிஎஸ்டி வரி விதிப்பு அமலாக்கப்பட்ட விதத்தால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கார்பரேட் நிறுவனங்களே பலனடைந்து வருவதாகவும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிவிட்டன. மோடி அரசாங்கத்தின் ஜிஎஸ்டி, வரி சீர்திருத்தம் அல்ல. இது, பொருளாதார அநீதிக்கும், பெருநிறுவனங்களுடனான கூட்டணிக்குமான ஒரு மிருகத்தனமான கருவி. ஏழைகளைத் தண்டிக்கவும், எம்எஸ்எம்இக்களை நசுக்கவும், மாநிலங்களை குறைமதிப்புக்கு உட்படுத்தவும், பிரதமருக்கு வேண்டிய சில தொழிலதிபர் நண்பர்களுக்கு உதவவும் ஏற்ற வகையில் இது வடிவமைக்கப்பட்டது.
“நல்ல மற்றும் எளிமையான வரி” என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்தியாவுக்கு கிடைத்ததோ, ஐந்து அடுக்கு வரி. அதுவும்கூட, 900 முறைக்கும் மேல் திருத்தப்பட்டுள்ளது. கேரமல் பாப்கார்ன் மற்றும் கிரீம் பன்கள் கூட அதன் குழப்ப வலையில் சிக்கியுள்ளன.
என்னதான் பட்டய கணக்காளர் படைகள் நுணுக்கமாக செயல்பட்டாலும், அதையும் கடந்து பெரு நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கக்கூடிய ஓட்டைகளை அதிகார வர்க்கம் உருவாக்கி வைத்திருக்கிறது. அதே நேரத்தில் சிறு கடைக்காரர்கள், எம்எஸ்எம்இக்கள் மற்றும் சாதாரண வர்த்தகர்கள் சிவப்பு நாடாக்களில் மூழ்கியுள்ளனர். தினமும் அவர்களை துன்புறுத்தும் ஒரு கருவியாக ஜிஎஸ்டி போர்டல் உள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வேலை வழங்குநர்களான எம்எஸ்எம்இக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து 18 லட்சத்திற்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
குடிமக்கள் இப்போது தேநீர் முதல் சுகாதார காப்பீடு வரை அனைத்துக்கும் ஜிஎஸ்டி செலுத்துகிறார்கள், அதே நேரத்தில் கார்ப்பரேட்டுகள் ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரிச் சலுகைகளை அனுபவிக்கின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் வேண்டுமென்றே ஜிஎஸ்டி கட்டமைப்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன, இதனால் விவசாயிகள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகின்றனர். பாஜக அல்லாத ஆளும் மாநிலங்களைத் தண்டிக்க ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இது மோடி அரசாங்கத்தின் கூட்டாட்சி எதிர்ப்பு நிகழ்ச்சி நிரலுக்கு தெளிவான சான்றாகும்.
இந்தியாவின் சந்தைகளை ஒன்றிணைத்து வரிவிதிப்பதை எளிமைப்படுத்தும் நோக்கில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் தொலைநோக்கு யோசனையாக ஜிஎஸ்டி இருந்தது. ஆனால் அதன் வாக்குறுதி, மோசமான செயல்படுத்தல், அரசியல் சார்பு மற்றும் அதிகாரத்துவ அத்துமீறல் ஆகியவற்றால் ஏமாற்றப்பட்டுள்ளது. மக்களுக்கு முன்னுரிமை, வணிக நட்பு மற்றும் உண்மையிலேயே கூட்டாட்சி மனப்பான்மை கொண்டதாக ஜிஎஸ்டி இருக்க வேண்டும். அதற்கேற்ப சீர்திருத்தம் இருக்க வேண்டும்.
அனைவருக்கும் பயனுள்ள வரி முறையை இந்தியா பெற வேண்டும். சலுகை பெற்ற சிலருக்கானதாக அது இருக்கக்கூடாது. அப்போதுதான், சிறு கடைக்காரர் முதல் விவசாயி வரை ஒவ்வொரு இந்தியரும் நமது நாட்டின் முன்னேற்றத்தின் பங்குதாரராக இருக்க முடியும்.” என தெரிவித்துள்ளார்.