கடலூர்: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுந்தனர்.
உலக புகழ் பெற்ற சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ கொடியேற்றம் கடந்த 23-ம் தேதி நடந்தது. கோயிலில் சித்சபைக்கு எதிரே உள்ள கொடிமரத்தில் உற்சவ ஆச்சாரியார் சிவ கைலாஷ் தீட்சிதர் கொடி ஏற்றினார். அதன் பிறகு, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது.
தொடர்ந்து 24-ம் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் சாமி வீதி உலா, 25-ம் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலா, 26-ம் தேதி வெள்ளி பூத வாகனத்தில் சாமி வீதி உலா, 27-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா (தெருவடைச்சான்), 28-ம் தேதி வெள்ளி யானை வாகனத்தில் சாமி வீதி உலா, 29 – ம் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமிவீதி உலா, 30-ம் தேதி தங்கரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து முக்கிய திருவிழாவான தேர் திருவிழா இன்று( ஜூலை.1) நடைபெற்றது.
இன்று காலை 6 மணிக்கு மேள,தாளம் முழங்கிட வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசகம் ஓதிட கோயில் இருந்து ஸ்ரீநடராஜர், ஸ்ரீ சிவகாமசுந்திரி அம்பாள், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து சிவ, சிவா என்ற முழக்கத்துடன் பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுந்தனர். தேருக்கு முன்னாள் சிவனடியார்கள், வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள், தேவாரம், திருவாசம் பாடியபடியே சென்றனர். பெண்கள் தேரோடும் நான்கு வீதிகளிலும் மாக்கோலமிட்டனர். சிவ பக்தர்கள் சிவ வாத்தியங்களுடன் சிவ தாண்டவம் ஆடினர்.
தேர் கீழ வீதி நிலையில் இருந்து புறப்பட்டு கீழவீதி,தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதிகள் வழியாக சென்று இரவு நிலையை அடையும். ஒவ்வொரு வீதிகளில் மண்டகபடி தாரர்கள் படையல் செய்தனர். மதியம் மேலவீதியும் வடக்கு வீதியும் சந்திக்கும் முகப்பில் பருவதராஜகுல மரபினர் ஸ்ரீநடராஜர், ஸ்ரீ சிவகாமி அம்மாளுக்கு பட்டு சார்த்தி படையல் செய்வார்கள். இரவு தேரில் இருந்து சாமிகள் மேள தாளம் முழங்கிட கோயிலுக்கு கொண்டு செல்லப்படும்.இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீமன் நடராஜமூர்த்திக்கு ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.
நாளை( ஜூலை.2) சூரிய உதயத்துக்கு முன்பு, அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீமன்நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். அதன் பிறகு, காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பிறகு, பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபை பிரவேசமும் நடைபெறும். நாளை மறு நாள்( ஜூலை.3) பஞ்சமூர்த்தி முத்துப் பல்லக்கு வீதி உலாவுடன் திருவிழா நிறைவடைகிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். தேரோட்டத்தையொட்டி சிதம்பரம் டிஎஸ்பி லாமேக் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுபட்டுள்ளனர். தேரோட்டத்தை முன்னிட்டு நான்கு வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் அன்னதானம் செய்யப்பட்டது. தரிசன விழாவையொட்டி வெளிநாடு, வெளி மாநில, வெளி மாவட்ட, உள்ளூர் பக்தர்கள் என ஆயிரக்கனக்கான பக்தர்கள் சிதம்பரம் நகரில் குவிந்துள்ளனர்.