’கண்ணப்பா’ படத்திற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது என்று மோகன் பாபு தெரிவித்துள்ளார்.
மோகன் பாபு தயாரிப்பில் விஷ்ணு மஞ்சு, பிரபாஸ், அக்ஷய்குமார், மோகன்லால், சரத்குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘கண்ணப்பா’. இதுவரை உலகளவில் 60 கோடி வசூலை கடந்திருக்கிறது. இப்படத்தினை முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதன் சிறப்பு காட்சி திரையிடல் சென்னையில் நடைபெற்றது. இதில் மோகன் பாபு கலந்து கொண்டார்.
இந்த சிறப்புக் காட்சியில் இயக்குநர்கள் பி.வாசு, பொன்ராம், இயக்குநர் பிரபுதேவா, ராதிகா சரத்குமார், ஏ.சி.சண்முகம், ஒய்.ஜி.மகேந்திரன், நடிகர் தியாகராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். இப்படம் முடிவடைந்த உடன் அனைவருமே மோகன் பாபுவை வெகுவாக பாராட்டினார்கள்.
இந்த வரவேற்பு குறித்து மோகன் பாபு, “நான் கஷ்டப்படும் காலங்களில் சோறு, தங்க இருப்பிடம் கொடுத்தது தமிழ்நாடு தான். என் மூன்று பிள்ளைகளும் இங்கு தான் பிறந்தார்கள். விஷ்ணு மஞ்சுவை ராதிகாவுக்கு சிறுவயதில் இருந்தே தெரியும், அவர் போல்டான டஃப்பான லேடி. என்னுடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
சரத்குமாரின் ’நாட்டாமை’ படத்தை தான் ’பெத்தராயுடு’ என்று தெலுங்கில் எடுத்தேன். கடந்த மூன்று வருடங்களாக நானும் சரத்குமாரும் மிக நெருக்கமாக சகோதரர்களை போல் பழகி வருகிறோம். பிரபுதேவா என் தம்பி போல், அவர் எனக்காக இந்த படத்தில் பணியாற்றினார். ’கண்ணப்பா’ படத்திற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதிகமான பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்தாலும், கண்ணப்பாவாக மக்கள் மனதில் நின்றிருக்கும் விஷ்ணு மஞ்சு இதற்காக கடினமாக உழைத்தார், அவரது உழைப்புக்கு கிடைத்த பலன் தான் இந்த வெற்றி. ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.