ஓசூர் பகுதியில், ‘ஜமுனாபாரி’ ஆடு வளர்ப்பில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆடு வளர்ப்புக்கு உரிய விழிப்புணர்வும், ஆடுகள் வாங்க மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயம் பிரதானத் தொழிலாகவும், கால்நடை வளர்ப்பு சார்பு தொழிலாகவும் இருந்து வருகிறது. கால்நடை வளர்ப்பில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, பாகலூர் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் பரண் அமைத்து, ‘ஜமுனாபாரி’ இன ஆடுகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பாகிஸ்தானைப் பூர்விகமாகக் கொண்ட இந்த ஆடுகள் 80 முதல் 140 கிலோ எடை வரை வளரக்கூடியது. ஆடுகளின் காதுகள் ஒரு அடி நீளம் வரை இருக்கும். ஆண் ஆடுகள் 5 அடியும், பெண் ஆடுகள் 4 அடி உயரமும் சராசரியாக வளரக்கூடியன.
இதன் கறி அதிக சதைப்பற்று உள்ளதால் அசைவப் பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடுவதால், ஓசூர், கர்நாடக மாநில சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், மலேசியா, தைவான், சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் அரேபிய நாடுகளுக்குப் பதப்படுத்தப்பட்ட கறிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த ரக ஆடுகளைச் சிலர் வீடுகளில் செல்லப்பிராணிகளாகப் பராமரித்து வளர்த்து வருகின்றனர்.
இது தொடர்பாக, ‘ஜமுனாபாரி’ ஆடு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: ‘ஜமுனாபாரி’ ஆடுகள் இந்தியாவில் அதிகளவில் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் போன்ற நகரங்களில் வளர்க்கப்படுகிறது. இந்த ரகம் ஆடுகளை தமிழகத்தில் பலர் வளர்த்து விற்பனை செய்கின்றனர். ஒரு குட்டியின் விலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரையிலும் விற்பனையாகின்றன.
அதேபோல நன்கு வளர்ந்த ஒரு ஆட்டின் விலை ரூ.1 லட்சம் வரை விற்பனையாகிறது. இதன் கறி நட்சத்திர ஓட்டல்களில் அதிகம் விற்பனை செய்யப்படுகிறது. இதன் பாலில் அதிகம் புரதச்சத்து உள்ளதால், பாலையும் பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இந்த ஆடுகள் ஒருமுறை 3 குட்டிகள் வரை ஈன்றும். இந்த ஆடுகளுக்கு பாசிப்பயறு, துவரை மற்றும் கடலை புண்ணாக்கை உணவாக வழங்குகிறோம். ஓசூர் பகுதியில் வளர்க்கப்படும் இந்த ஆடுகளைக் கர்நாடக மாநில வியாபாரிகள் நேரடியாக வந்து வாங்கி சென்று, கறியைப் பதப்படுத்தி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.
4 ஆடுகள் வளர்த்தால் 2 ஆண்டுகளில் 20 குட்டிகள் வரை கிடைக்கும். ஓசூர் பகுதியில் உள்ள தட்பவெப்ப நிலைக்கு இந்த ரக ஆடுகள் நன்கு வளர்கின்றன. எனவே, ஓசூர் பகுதி விவசாயிகளுக்கு, ‘ஜமுனாபாரி’ ஆடு வளர்ப்பு குறித்த விழிப்புணர்வும், ஆடுகள் வாங்க மானியமும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.