ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் பஷமைலாரம் பகுதியில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் நேற்று நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், சங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள பஷமைலாரம் பகுதியில் சிகாச்சி ரசாயன தொழிற்சாலை கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு மைக்ரோ கிறிஸ்டலைஸ் செல்லுலாஸ் எனும் ரசாயன பவுடர் தயாரிக்கப்பட்டு வருகிறது. 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த தொழிற்சாலையில் நேற்று காலை 143 தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆலையில் இருந்த ரியாக்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் தொழிலாளர்கள் சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு தூக்கி எறியப்பட்டனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 39 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது.
சம்பவ இடத்துக்கு நேரில் வருகை தந்த முதல்வர் ரேவந்த் ரெட்டி, விபத்து குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடனடி நிவாரணமாக, இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000-மும் வழங்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார். இது உடனடி நிவாரணம் மட்டுமே என்றும் இழப்பீடு அல்ல என்றும் அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, வெடிவிபத்தில் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி, காயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களை சந்தித்த முதல்வர், அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.