புதுடெல்லி: பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே எக்ஸ் தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ், ஊழல் மற்றும் அடிமைத்தனம். இந்த வகைப்படுத்தப்படாத ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க புலனாய்வு அமைப்பால் (சிஐஏ) வெளியிடப்பட்டது. அதில், மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் எச்.கே.எல்.பகத் தலைமையிலான 150-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள், ரஷ்யாவின் உளவாளியாக செயல்பட அந்த நாட்டிடமிருந்து நிதி பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியின்போது, ரஷ்ய புலனாய்வு அமைப்பைச் சேர்ந்த 1,100 பேர் இந்தியாவில் இருந்தனர். அவர்கள், அரசு உயர் அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் கருத்து உருவாக்கம் செய்பவர்களை தங்கள் கைக்குள் போட்டுக் கொண்டிருந்தனர். தேர்தல் என்ற பெயரில் காங்கிரஸ் வேட்பாளர் சுபத்ரா ஜோஷி, ஜெர்மனி அரசிடமிருந்து 5 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு இந்தோ -ஜெர்மன் மன்றத்தின் தலைவரானார். இது ஒரு நாடா அல்லது இடைத்தரகர்களின் கைப்பாவையா என காங்கிரஸ் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.