சென்னை: சென்னையில் 8 இடங்களில் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோக மையங்களை, டிட்கோ மூலமாக அமைக்க மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில், ரிப்பன் மாளிகை அரங்கில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து 37 வகையான திட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் 38-வதாக பல்நோக்கு கட்டிடம் கட்டவும் நிதி செலவிட அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பள்ளியில் தலா ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் 61 தற்காலிக இடைநிலை ஆசிரியர்களை நியமிக்கவும், ரூ15 ஆயிரம் ஊதியத்தில் 300 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கவும், ரூ.18 ஆயிரம் ஊதியத்தில் 206 தற்காலிக முதுகலை ஆசிரியர்களை நியமிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
புயல், அதிகனமழை, வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடரால் பாதிக்கப்படும் சென்னை மணலி பகுதியில், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.12 கோடியில் நிரந்தர பேரிடர் மீட்பு மற்றும் நிவாரண மையம் அமைக்க அரசின் நிர்வாக அனுமதி பெறவும், மாநகராட்சிப் பள்ளிகளில் தினக்கூலியாக ரூ.753 அளவில், 1,538 தற்காலிக தூய்மைப் பணியாளர்களை நியமிக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அரசு புறம்போக்கு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க, துறை ஆவணங்களில் பாதை, வண்டி பாதை, பாட்டை, களம், மயானம், இடுகாடு, கார்ப்பரேஷன், பப்ளிக் ஆகிய வகைப்பாடு கொண்ட நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க மன்றத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது தமிழக அரசின் நகர இயற்கை எரிவாயு விநியோக கொள்கை 2023-ன்படி வீடுகளுக்கு இயற்கை எரிவாயு விநியோகம் மேற்கொள்ள மாநகராட்சி சார்பில் தலா 21 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட 8 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்த இடங்களில் இயற்கை எரிவாயு விநியோக கட்டமைப்பை, அரசால் அங்கீகரிக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகஸ்தர்கள் ஏற்படுத்த டிட்கோ நிறுவனத்துக்கு மாநகராட்சி அனுமதி வழங்கியுள்ளது. சென்னை எழும்பூரில் உள்ள தமிழ் வளர்ச்சி இயக்கக வளாகத்தில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சார்பில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் சிலை அமைக்கவும், பட்டினப்பாக்கத்தில் உள்ள டிமாண்டி சாலைக்கு ‘மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் சாலை’ என பெயர் சூட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கீழ்ப்பாக்கம், வாடல்ஸ் சாலையை ‘தந்தை பேராயர் எஸ்றா சற்குணம் சாலை’ என பெயர் மாற்றம் செய்ய அரசின் ஒப்புதல் எதிர்நோக்கி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது கூட்டத்தில் மொத்தம் 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மன்ற கூட்டத்தில் துணை மேயர் மு.மகேஷ் குமார் பேசியதாவது: தற்போது சென்னை மாநகராட்சியின் கீழ் உள்ள 10 இடங்களில் மட்டுமே வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இன்னும் பல இடங்களில் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க ஒப்பந்தம் கோரப்படா மல் உள்ளது.
இதனால் மாநகராட்சிக்கு வருமானம் குறைகிறது. விரைவில் இதர இடங்களுக்கும் ஒப்பந்தம் கோர வேண்டும். மெரினா கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதேபோல் பெசன்ட் நகர் கடற்கரையிலும் மேற்கொள்ள வேண்டும்.
சென்னை மாநகரத்திலுள்ள வாகன நிறுத்த பிரச்சினையைத் தீர்க்க என்எஸ்சி போஸ் சாலை, அண்ணா நகர், தி.நகர் போன்ற இடங்களில், புதிய பன்னடுக்கு வாகன நிறுத்த மையங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, கேள்வி நேரத்தின் போது, அமித் ஷா குறித்து விமர்சித்த ஆ.ராசாவைக் கண்டித்து பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த்பேச முயன்றபோது, துணை மேயரும், திமுக கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால், உமா ஆனந்த் பேசாமல் அமர்ந்துவிட்டார்.