கிருஷ்ணகிரி: மா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி கிருஷ்ணகிரியில் தேமுதிக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற, அக்கட்சியின்பொதுச் செயலாளர் பிரேமலதா, பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி கூறுவதும், மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்று கூறுவதும் அவரவர் கருத்து.
தேமுதிகவைப் பொறுத்தவரை கூட்டணி ஆட்சியை வரவேற்கிறோம். தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி 9-ம் தேதி அறிவிப்போம். பாஜக, திமுகவை எதிர்க்கும் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைக்கப்படுமா என்பதை காலம்தான் முடிவு செய்யும்.
திருப்புவனத்தில் அஜித்குமார் என்ற இளைஞர் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்துள்ளார். மாரடைப்பால் அவர் உயிரிழந்திருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறுவது வருத்தமளிக்கிறது. காவல் துறை மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமே தவிர, ஏவல் துறையாக இருக்கக் கூடாது. இவ்வாறு பிரேமலதா கூறினார்.