சென்னை: தமிழகம் முழுவதும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேற்று வகுப்பு தொடங்கியது. மாநில கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் சிவப்பு கம்பள விரிப்புடன் மேளதாளம் முழங்க மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நடப்பு கல்வி ஆண்டில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேரும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, ஜூன் 30-ம் தேதி வகுப்பு தொடங்கும் என கல்லூரி கல்வி ஆணையர் ஏ.சுந்தரவல்லி அறிவித்திருந்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நேற்று தொடங்கின.
கல்லூரியில் முதன்முதலாக அடியெடுத்து வைத்து மாணவ-மாணவிகளை சீனியர் மாணவர்களும், பேராசிரியர்களும் அன்போடு வரவேற்று வகுப்பறைக்கு அழைத்துச் சென்றனர். சென்னையில் மாநில கல்லூரி உள்பட பல கல்லூரிகளில் மாணவர்களுக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாநில கல்லூரியில் முதல்வர் ராமன் தலைமையில் மாணவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டது. என்எஸ்எஸ் மாணவர்கள் கரகாட்டம் ஆடியும், பறையடித்தும் முதலாம் ஆண்டு மாணவர்களையும் பெற்றோரையும் வரவேற்றனர். சீனியர் மாணவர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதுதொடர்பாக கல்லூரியின் முதல்வர் ஆர்.ராமன் கூறும்போது, “முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு வார காலம் படிப்பு அல்லாமல், பொதுவான விஷயங்கள் குறித்து கற்பிக்கப்படும். மனித உரிமைகள், மதிப்பீடுகள், உளவியல், எதிர்கால இலக்கு, உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள், அதற்கான போட்டித் தேர்வுகள் போன்றவை குறித்து நிபுணர்கள் கருத்துரை வழங்குவர். அவர்களுடன் மாணவர்கள் கலந்துரையாடலாம்.
மேலும், பல்கலைக்கழகத் தேர்வுகள், செமஸ்டர் முறை குறித்தும் சொல்லித் தரப்படும். முதல் நாளில் மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் மனித உரிமைகள் குறித்து மாணவர்களிடையே உரையாற்றினர்” என்றார்.
இதற்கிடையே, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருவார கால அறிமுக பயிற்சித் திட்டத்தை சென்னை ராணி மேரி கல்லூரியில் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி கல்வி ஆணையர் ஏ.சுந்தரவல்லி, ராணி மேரி கல்லூரியின் முதல்வர் உமா மகேஸ்வரி மற்றும் பேராசிரியைகள் கலந்துக்கொண்டனர்.