சென்னை: `ஓரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 1) தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் வகையில் திமுக பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில், வாக்குச்சாவடிதோறும் 30 சதவீதம் வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்தார்.
இதையடுத்து, இந்த உறுப்பினர் சேர்க்கை திட்டத்தை இன்று (ஜூலை 1) முதல்வர் ஸ்டாலின், சென்னையில் தொடங்கி வைக்கிறார். முன்னதாக, இதற்காக, திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் தொகுதிக்கு ஒருவர் என 234 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதுடன், உறுப்பினர் பதிவுக்கென தனி செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது.
பயிற்சி பெற்ற 234 பேரும் தொகுதி வாரியாக 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் பூத் டிஜிட்டல் முகவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். இது தொடர்பாக இன்று, முதல்வர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து அறிவிப்பு வெளியிடுகிறார். தொடர்ந்து, நாளை ஜூலை 2-ம் தேதி முதல் திமுகவின் நிர்வாக ரீதியான 76 மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
மறுநாள் ஜூலை 3-ம் தேதி தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளிலும் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பரப்புரை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிறைவாக ஆக.15-ம் தேதிக்குப்பின் நிறைவு விழா நடத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், வீடு வீடாக செல்லும் போது எதிர்க்கட்சியினர் இல்லங்களுக்கும் நேரில் சென்று பேச வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.