பிரயாக்ராஜ்: மதம் மாற்றி தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுத்த உத்தரபிரதேசத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 15 வயது சிறுமியை போலீஸார் மீட்டுள்ளனர். இதுகுறித்து உ.பி. போலீஸ் துணை கமிஷனர் குல்தீப் சிங் குணாவத் கூறியதாவது: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மாவட்டம் பூல்பூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை கடந்த மே 8-ம் தேதி 19 வயதான தர்க்சனா பானு என்பவர் கேரளாவுக்கு கடத்திச் சென்றுள்ளார்.
மதமாற்றம் செய்யவும், தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவும் அவரைக் கடத்திச் சென்றதாகத் தெரிகிறது. ஆனால் அந்த சிறுமி, பானுவிடமிருந்து தப்பித்து திருச்சூர் ரயில் நிலையத்துக்கு வந்து போலீஸாரிடம் தகவல் தெரிவித்து அங்கிருந்து தனது தாய்க்கு போன் செய்துள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரயாக்ராஜ் போலீஸார் அங்கு சென்று சிறுமியை மீட்டனர். மேலும் பானு, அவரது கூட்டாளி முகமது கைஃப் ஆகிய 2 பேரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமியின் தாய் தற்போது கொலை மிரட்டல் வருவதாக புகார் செய்துள்ளார். சிறுமியை, பானு டெல்லி ரயில் மார்க்கமாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியை அவர்கள் கேரளாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். முதலில் பணம் கொடுப்பது போல கொடுத்து மதமாற்றம் செய்யவும், பின்னர் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடவேண்டும் என்றும் சிறுமிக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.