சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 72,943 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 65 சதவீதம் அதிகமாகும். தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதேபோல், 3 அரசு பல் மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்கள் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில், 2025-26-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது ஜூன் 25-ம் தேதியுடன் நிறை வடைந்தது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆர்வமாக விண்ணப்பித்தனர். நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 30 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும், அரசு ஒதுக்கீட்டுக்கு 42 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தம் 72,943 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டைவிட 65 சதவீதம் கூடுதல் எனவும் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், விண்ணப்பதாரர்களின் நீட் மதிப்பெண்களை மத்திய அரசிடமிருந்து பெற்று அதன் அடிப்படையில், சில தினங்களில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.