சென்னை: காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கை பேணிப்பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் முக்கியப் பிரச்சினைகளில் காவல்துறை உயர் அலுவலர்கள் ஊடகங்களுக்கு தெளிவாக விளக்கமளித்து வதந்திகள் பரவுவதை தடுக்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச்செயலகத்தில், முதல்வர் தலைமையில் சட்டம்- ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தலைமைச் செயலர், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசித்தார். அப்போது மண்டல காவல்துறை ஐஜி-க்கள் தங்கள் மண்டலங்களில் குற்றத்தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் குறித்து விளக்கினர்.
கூட்டத்தில் முதல்வர் பேசியதாவது: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு, பொது அமைதியை அரசு கவனமாக கையாண்டு வருகிறது. அரசு எடுத்த நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி, தொழில் முதலீடு, புதிய தொழிற்சாலைகள், புதிய வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தமிழகம் அமைதியான மாநிலமாக திகழ காவல்துறையின் பங்களிப்பு முக்கியமானதாக விளங்குகிறது.
மேலும், காவல் நிலையங்களுக்குப் புகார் கொடுக்க வரும் அனைத்து பொதுமக்களிடமும் கண்ணியத்தோடு நடந்து கொண்டு, புகார்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த தீவிரம் காட்ட வேண்டும்.
சட்டம்- ஒழுங்கு தொடர்பான முக்கியப் பிரச்சினைகள் ஏற்படும்போது காவல்துறை உயர் அலுவலர்கள் உடனடியாக ஊடகங்களுக்கு அப்பிரச்சினை குறித்து தெளிவாக விளக்கமளித்து, வதந்தி பரவுவதை தடுக்க வேண்டும். சாதி, சமய பூசல்களில் ஈடுபடுவர்கள், வதந்தி மற்றும் வெறுப்புணர்வை பரப்பி அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மீதான வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காவல் துறையினர் முழுமையாக செயல்பட சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் சட்டம்-ஒழுங்கை பேணிப் பாதுகாத்து, நீதியை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தினார்.
இக்கூட்டத்தில், தலைமைச்செயலர் நா.முருகானந்தம், உள்துறை செயலர் தீரஜ்குமார், டிஜிபி சங்கர் ஜிவால், பொதுத்துறை செயலர் ரீட்டா ஹரீஷ் தாக்கர், டிஜிபி (நிர்வாகம்) ஜி.வெங்கட்ராமன், ஏடிஜிபி சட்டம்- ஒழுங்கு டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையர் ஆ.அருண் ஆகியோர் பங்கேற்றனர். காணொலிக் காட்சி வாயிலாக மத்திய மண்டல ஐஜி ஜோஷி நிர்மல் குமார், மேற்கு மண்டல ஐஜி டி.செந்தில் குமார், தெற்கு மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் பங்கேற்றனர்.
சமூக வலைதள பதிவு: இதனிடையே மு.க.ஸ்டாலின் வெளியிட்ட சமூகவலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது: குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாக திமுக அரசு திகழ்கிறது.
போதைப்பொருள், கள்ளச்சாராயம், பெண்கள் பாதுகாப்பு, லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன். இவ்வாறு கூறியுள்ளார்.
பதவி உயர்வு ஆணை வழங்கல்: காவலர்களுக்கான தற்போதுள்ள பதவி நிலை உயர்வுத்திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் ஆணையினை செயல்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாநகர காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள், ஒவ்வொரு காவல் சரகத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் 11 முதல் நிலை காவலர்கள் என மொத்தம் 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணைகளை நேற்று முதல்வர் வழங்கினார்.