சென்னை: தமிழகத்துக்கு நடப்பு (2025-26) கல்வியாண்டிலும் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கான நிதி ரூ.1,800 கோடியை வழங்காமல் மத்திய அரசு தாமதம் செய்து வருவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையில் முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தொடர்ந்து 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடைபெற்றது. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையிலான இக்கூட்டத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், பள்ளிக்கல்வித் துறை செயலர் சந்தரமோகன், தமிழக பாடநூல் கழக மேலாண்மை இயக்குநர் சங்கர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநிலத் திட்ட இயக்குநர் ஆர்த்தி மற்றும் துறைசார்இயக்குநர்கள் பங்கேற்றனர். அதன்பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஒவ்வொரு மாவட்டமாக தனித்தனியாக ஆலோசனை நடத்தப்பட்டது. புகார் எண்ணுக்கு வந்த புகார்கள், அதில் தீர்வு காணப்பட்டவை, துறைசார்ந்த நிலுவையில் உள்ள கோப்புகள், 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினோம். கல்வி அலுவலர்கள் ஆய்வுகளை அதிகம் மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
பள்ளிகளில் சாதி ரீதியான பிரச்சினைகள் மற்றும் பாலியல் சார்ந்த குற்றங்களை தடுப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அந்தந்த மாவட்டங்களில் நடத்தப்படுகிறது. மேலும், இடைநிலை ஆசிரியர்கள் 2,346 பேர் பணிநியமனம் அடுத்த மாதம் நிறைவடையும். அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மேம்படுத்தவும் விவாதித்தோம். சில பகுதிகளில் 5 வயதை கடந்த குழந்தைகள் இல்லாத சூழல்களும் உள்ளன. அதையும் ஆராய்ந்து வருகிறோம். தனியார் பள்ளிகளில்கூட பல்வேறு இடங்களில் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ளது.
குறைந்த நபர்கள் பேசக்கூடிய சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கியுள்ளனர். 8 கோடி மக்கள் இருக்கும் தமிழுக்கு நிதி குறைவாக ஒதுக்கப்படுவது பாரபட்சமாகும். தமிழகத்துக்கு 2025-26-ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வித் திட்டத்துக்கு ரூ.1,800 கோடி நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், இதுவரை நிதி நிலுவையில் உள்ளது. அவர்கள் தேசிய கல்விக் கொள்கைக்கு கையெழுத்து போட்டால்தான் நிதி தருவோம் என கூறுகின்றனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து சட்டப்போராட்டம் நடத்துவோம், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று நம்பிக்கை உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.