பள்ளிப் படிப்பை முடிக்கும் ஒவ்வொரு மாணவரின் வாழ்விலும் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது. கல்லூரிப் படிப்புக்குப் பிறகு உங்களது வாழ்வில் கிடைக்கும் பதவி, வருமானம், சமூக அந்தஸ்து, பொருளாதார நிலை போன்றவை அனைத்தும் உங்களது வேலையைப் பொறுத்தே அமைகிறது. இதற்காகக் கல்லூரிப் படிப்பின்போதே உங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள முடியும்.
1. ஏ.ஐ. கருவிகள்: இன்றைய காலக்கட்டத்தில் ஏ.ஐ. கருவிகளைப் பயன்படுத்த கற்றுக்கொள்வது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. எதிர்காலத் தில் எந்தத் துறையில் வேலையைத் தேர்வுசெய்தாலும், அத்துறை சார்ந்து ஏ.ஐ. பற்றிக் கற்றுக்கொள்வது நீங்கள் வேலை பெறுவதை உறுதிப்படுத்துவதுடன், சிறப்பாகப் பணியாற்றவும் உதவும். ஏ.ஐ. அசிஸ்டென்ட்டாக Chat Gpt, Claude, Gemini, Deep Seek, Copilot; பிரசென்டேஷனுக்கு Gamma; நோட்மேக்கர் – மீட்டிங் அசிஸ்டென்ட் பணிகளுக்கு Falkom, Midjourney; குறிப்பெடுக்க Evernote, Onenote போன்று தேவைக்கு ஏற்ப ஏ.ஐ. கருவிகளைப் பயன்படுத்தலாம்.
2. மென்திறன்கள் (சாஃப்ட் ஸ்கில்) – குழுவாகச் செயல்படும் திறன், தலைமைப் பண்பு, பிரச்சினைகளைத் தீர்க்கும் திறன், சவால்களை எதிர்கொள்ளும் ஆற்றல், படைப்பாற்றல், புத்தாக்கச் சிந்தனை, சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளும் திறன் போன்ற பல்வேறு திறன்களை உள்ளடக்கிய ஒரு பொதுவான பதம் மென்திறன் எனப்படுகிறது. இதில் முக்கியமானது தகவல் பரிமாற்றத் திறன். வேலைக்குத் தேர்வு செய்யும் நிறுவனங்கள் பல்வகை திறன்களை மதிப்பீடு செய்தே ஆட்களைத் தேர்வுசெய்கின்றன.
3. ஆங்கிலம் அவசியம்: தனியார் துறை நிறுவனங்கள் நடத்தும் நேர்முகத் தேர்வுகள், திறன்பேசிவழி நேர்முகத் தேர்வுகள், சுயவிவரக் குறிப்பு தயாரித்தல், குழுவிவாதம் ஆகியவற்றுக்கு ஆங்கில அறிவு மிக அவசியம். எனவே, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்வது வாழ்நாள் முழுவதும் உங்களுக்குக் கைகொடுக்கும். கருத்துகள், தகவல்கள், விளக்கங்களை எளிய நடையில் பிழையின்றி எழுத, பேசத் தெரிந்திருந்தால் போதுமானது. ஆங்கில அறிவை வளர்ப்பது தொடர்பான புத்தகங்களையும், யூடியூபில் காணொளிகளையும் நேரம் கிடைக்கும்போது பார்த்துக் கற்றுக்கொள்ளுங்கள்.
4. நட்பு: உங்கள் நட்பு வட்டம், உங்களைப் போல் லட்சியக் கனவுகளுடன் பயணிப்பவர் களுடன் மட்டும் இருக்கட்டும். உங்களைப் போல் ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருப்பவராக இருக்க வேண்டுமென்பதில்லை. ஏதாவது ஒரு போட்டித்தேர்வுக்குத் தயார் செய்பவராக, நேர்மறைச் சிந்தனை, லட்சியக் கனவு, நற்பண்புகள், கடின உழைப்பு ஆகியவற்றைக் கொண்டவராக இருந்தால் நல்லது.
5. உடல் ஆரோக்கியம்: வேலை பெறுவதற்கான தகுதிகளுள் ஒன்று என்பதையும் தாண்டி, வாழ்க்கை முழுமைக்கும் அவசியமான ஒன்று உடல் ஆரோக்கியம். தற்போது உடல் உழைப்பு பெருமளவு குறைந்துவிட்டது; உணவுப் பழக்கவழக்கங்களும் மாறிவிட்டன. எனவே, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே உடற்பயிற்சி, நல்ல உணவுப் பழக்கவழக்கம் ஆகியவற்றைக் கடைப்பிடிப்பது உங்கள் உடலுக்கு வலிமை தருவதுடன் நீங்கள் விரும்பும் வேலையைப் பெறவும் உதவும்.
– கட்டுரையாளர், துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு – தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோவை; karunas2k09@gmail.com