சேலம், தருமபுரி மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டங்களை கடந்த 19-ம் தேதி கூட்டினார் அன்புமணி ராமதாஸ். அதற்கு முந்தைய நாளே, பாமக எம்எல்ஏ-க்களான கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணியும், அருளும் நெஞ்சு வலி என்று சொல்லி மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள். இவர்கள் இருவருமே மருத்துவர் அய்யாவுக்கு அணுக்கமாக இருப்பவர்கள் என்பதால் இந்த ‘நெஞ்சுவலி’ விவகாரமும் விவாதப் பொருளானது.
அன்புமணி பொதுக்குழு கூட்டத்தை நடத்திய அதேநாளில் இவர்கள் இருவரையும் மருத்துவர் ராமதாஸும் தைலாபுரத்துக்கு அழைத்திருந்தாராம். எந்தப் பக்கம் போனாலும் பழி வந்து சேரும் என்பதாலேயே இருவரும் மருத்துவமனை பக்கம் போய்விட்டதாக பாமக-வினரே சொல்கிறார்கள்.
ஜி.கே.மணியும் அருளும் பொதுக்குழு கூட்டத்துக்கு வராத போதும் அவர்கள் இருவரும் விரைவில் நலம்பெற வேண்டி சேலம் பொதுக்குழுவில் கூட்டுப் பிரார்த்தனை நடத்தினார் அன்புமணி. அதேசமயம், தருமபுரி பொதுக்குழுவில் பேசிய முன்னாள் எம்எல்ஏ-வான வேலுச்சாமி, “ஒடுக்கப்பட்டிருந்த சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு, அரசியல் அதிகாரம் ஆகியவற்றை பெற்றுத் தந்தது நீங்கள் (மருத்துவர் ராமதாஸ்) தான். உங்களால் உருவாக்கப்பட்ட கட்சிக்கு திறமை வாய்ந்த ஒருவரை தலைவராகக் கொண்டு வந்ததும் நீங்கள் தான். அவர் என்ன சாதனை செய்தார் என இப்போது கேட்கிறீர்கள்.
25 ஆண்டுகளாக இந்தக் கட்சியின் தலைவராக இருந்தவர் என்ன சாதித்து விட்டார்… இவர் என்ன செய்யவில்லை? இன்று உங்களைச் சுற்றி ஒரு சதிக்கூட்டம் இருக்கிறது. அவர்கள் இந்த இயக்கத்தை உடைக்கவும், அழிக்கவும் திட்டமிடுகிறார்கள். தருமபுரி மக்களவை தேர்தலில் சவுமியா அன்புமணி தோற்க நமது கட்சியில் உள்ள சதிகாரர்களும், புல்லுருவிகளும் தான் காரணம். அவர்களை அடையாளம் கண்டு அகற்றி இந்த இயக்கத்தை நீங்கள் வழிநடத்த வேண்டும்” என்று ஜி.கே.மணியை மறைமுகமாக தாக்கினார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகள் சிலர், “கட்சிக்குள் தற்போது நடக்கும் குழப்பங்களுக்கு ஜி.கே.மணியும் முக்கிய காரணம் என்ற ஆதங்கம் எங்கள் அனைவருக்கும் இருக்கிறது. எம்எல்ஏ-வான அருள் செஞ்சோற்றுக் கடனுக்காக இப்படி இருக்கிறார். அய்யாவுக்கும் சின்னய்யாவுக்கும் இடையில் ஏற்பட்ட மன வருத்தத்தை சிலர் பூதாகரமாக்கி விட்டார்கள்.
தனது மகனின் தொழில் துறைக்கு பங்கம் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ஜி.கே.மணி. ஆனால், அதையே துருப்பாக பயன்படுத்தி திமுக தரப்பில் பாமக-வின் ஸ்திரத்தன்மையை குலைக்க சிலர் சூழ்ச்சி செய்கிறார்கள். அவர்களின் நோக்கம் பாமக-வை தங்கள் பக்கம் ஈர்ப்பது இல்லை. எதிர்க்கூட்டணியில் சேர்ந்து அந்தக் கூட்டணியை பாமக வலுப்படுத்தி விடக்கூடாது என்பது தான்.
இதெல்லாம் தெரிந்து தான், ‘பாமக-வுக்குள் நடக்கும் பிரச்சினைகளுக்கு காரணம் திமுக தான்’ என சின்னய்யா பகிரங்கமாக குற்றம்சாட்டி இருக்கிறார். ஜி.கே.மணி மாத்திரமல்ல… இன்னும் சில சுயநலவாதிகளும் அய்யாவை சுற்றி இருந்து கொண்டு அவருக்கு தவறான ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நிஜமுகத்தைத் தெரிந்து கொண்டு அவர்களை எல்லாம் அய்யா ஒதுக்கிவைத்தாலே அனைத்தும் சுபமாகிவிடும்” என்றனர்.
அன்புமணிக்கு பின்னால் அணிவகுத்து நிற்பவர்கள் தனக்கு எதிரான மன நிலையில் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியில் மேடை ஏறினால் ஏடாகூடமாகலாம் என்பதாலேயே ஜி.கே.மணி தருமபுரி மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை தவிர்த்துவிட்டார் என்கிறார்கள் ராமதாஸ் விசுவாசிகள்.
இதனிடையே, நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருந்த தனது மருமகன் பரசுராமனை நலம் விசாரிக்க வந்த மருத்துவர் ராமதாஸ், அப்படியே ஜி.கே.மணியையும் அருளையும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டுப் போனதாகச் சொல்கிறார்கள். பாமக-வில் சகஜ நிலை திரும்புவதற்குள் இன்னும் எத்தனை பேருக்கு நெஞ்சு வலி வரப்போகிறதோ!