சென்னை: காவல் நிலையம் வந்த பெண்ணை கண்ணிய குறைவாக நடத்திய காவல் ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து மாநில மனித உரிமை ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையை சேர்ந்தவர் பிரியதர்ஷினி. இவர் நிலப்பிரச்சினை தொடர்பாக தனது தந்தை மற்றும் சகோதரனுக்கு எதிராக அளித்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யாமல், புகார் முடித்து வைக்கப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க கோவை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்துக்கு சென்றார். அப்போது அந்த காவல் நிலைய ஆய்வாளர் சாந்தமூர்த்தி, பிரியதர்ஷினியை கண்ணிய குறைவாக நடத்தியதாகவும், அவமரியாதை செய்ததாகவும் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில், பிரியதர்ஷினி புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், “காவல் நிலையங்களுக்கு வரும் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் பல உத்தரவுகளை பிறப்பித்தபோதும் அதை இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் பின்பற்றவில்லை.
புகார் குறித்த நிலையை தெரிந்துகொள்ள வந்த பெண்ணை கண்ணிய குறைவாக நடத்தியது மனித உரிமையை மீறிய செயல். எனவே பாதிக்கப்பட்ட பிரியதர்ஷினிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடாக தமிழக அரசு வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இந்தத் தொகையை ஆய்வாளர் சாந்தமூர்த்தியிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.