சென்னை: சென்னையில் நேற்று நடைபெற்ற விசிகவின் விருதுகள் வழங்கும் விழாவில், முன்னாள் துணைவேந்தர் கே.எஸ். சலம், நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு விசிக தலைவர் திருமாவளவன் விருதுகளை வழங்கி கவுரவித்தார். ஆண்டுதோறும் சட்டமேதை அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, சமூகம், அரசியல் உள்ளிட்ட தளங்களில் சிறப்பாக பணியாற்றிய ஆளுமைகளுக்கு விசிக சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு, முன்னிலை வகித்த விசிக பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி. வரவேற்புரையாற்றினார். அப்போது, அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு மாணவர் மைக்கேல் எழுதி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் வெளியிட்ட விசிக குறித்த புத்தகத்தை ரவிக்குமார் திருமாவளவனிடம் வழங்கினார்.
விசிக பொதுச்செயலாளர் சிந்தனைச்செல்வன் எம்.எல்.ஏ. நோக்கவுரையாற்றினார். விழாவை கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையேற்று நடத்தினார். விருதாளர்களின் வாழ்க்கைப் பயணம் குறித்த தகுதியுரையை வாசித்த திருமாவளவன், 7 பேருக்கான விருதுகளையும் வழங்கினார்.
அதன்படி, ஆந்திராவில் உள்ள திராவிட பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கே.எஸ்.சலமுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது, நடிகர் சத்யராஜுக்கு ‘பெரியார் ஒளி’ விருது வழங்கப்பட்டது. அதேபோல, புதுச்சேரி முன்னாள் முதல்வர் வெ.வைத்திலிங்கத்துக்கு ‘காமராசர் கதிர்’ விருது, பவுத்த ஆய்வறிஞர் பா.ஜம்புலிங்கத்துக்கு ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருது, தமிழ் தேசிய விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தியாகுவுக்கு ‘மார்க்ஸ் மாமணி’ விருது, தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை தலைவர் பி.ஏ.காஜா முயீனுத்தீன் பாகவிக்கு ‘காயிதேமில்லத் பிறை’ விருது, யாழ்ப்பாண தமிழறிஞர் அ.சண்முகதாஸுக்கு ‘செம்மொழி ஞாயிறு’ விருது ஆகியவை வழங்கப்பட்டன.
தொடர்ந்து, திராவிடம் குறித்து எழுதிய புத்தகத்தை திருமாவளவனிடம் கே.எஸ்.சலம் வழங்கினார். இதையடுத்து விருதாளர்கள் ஏற்புரையாற்றினர். விசிக தலைவர் திருமாவளவன் பேசியதாவது: தொடக்கத்தில் சில தரப்பினரோடு இணைந்து இயங்குவதில் சிக்கல் இருந்தது. பின்னர் மார்க்சியவாதிகள், பெரியாரிய வாதிகள் என அனைத்து தரப்போடும் இணைந்து இயங்க முடியும் என்பதை விசிக உறுதி செய்தது.
பெரியாரும் அம்பேத்கரும் ஒரே திசையில் பயணித்தவர் என்பதை நாம் தெளிவுபடுத்தினோம். இதெல்லாம் இந்திய அரசியலின் புதிய முயற்சிகள். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கருத்தியல் ஆளுமைகளாக இருப்பது விசிகவினர் தான். அப்போது தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக விசிக விளங்கும். தேசியப் பாதையும் தேவை என்ற அடிப்படையில் விசிக இயங்குகிறது.
எத்தனை இடங்களில் போட்டியிடுவீர்கள் என திரும்பத் திரும்ப கேட்கிறார்கள். தற்காலிக இயக்கத்தோடு விசிகவை ஒப்பிடுகிறார்கள் என்றே கருதுகிறேன். திருநீறை அழித்துவிட்டான் திருமாவளவன் என்று அரசியல் பேசுகிறார்கள். எங்களைப் பற்றி பேசிக் கொண்டே இருங்கள். ஏனென்றால் புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். எங்களை டீ, பன் கொடுத்து ஏமாற்றிவிடலாம் என கணக்கு போடாதீர்கள்.
10 தொகுதிகளுக்கு மேல் கொடுத்து ஊக்கப்படுத்த மாட்டோம் என்று பேசுவது அவர்கள் மதிப்பீடு. ஆனால் 234 தொகுதிகளுக்கும் விசிக தகுதியானது. அந்த வலிமை எங்களுக்கு உண்டு. இதை ஆணவத்தில் சொல்லவில்லை. சமூக மாற்றத்தின் பார்வை அடிப்படையில் சொல்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தலைமை நிலையச் செயலாளர் பாலசிங்கம் நன்றியுரையாற்றினார். நிகழ்வில், விசிக எம்எல்ஏக்கள், விசிக அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான லயன் ஆர்.பன்னீர்தாஸ், 190-வது வட்டச் செயலாளர் சிட்டு (எ) ஆமோஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.