மதுரை: முருக பக்தர்கள் மாநாட்டில் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் நேரலையில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கவர்ந்து சாதனை படைத்துள்ளது. மதுரையில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22-ல் முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. முன்னதாகமாநாட்டுத் திடலில் 6 நாட்களாக அறுபடை வீடுகளின் கண்காட்சியும் நடத்தப்பட்டது. ஏராளமானோர் தங்கள் குழந்தைகளை முருகன் வேடத்துடன் கண்காட்சிக்கு அழைத்து வந்தனர். பலர்காவடி எடுத்தும், அலகு குத்தியும் முருகனை தரிசிக்க வந்தனர்.
மாநாட்டில் பல லட்சம் முருக பக்தர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் இறுதியில் கந்த சஷ்டி கவசம் பாட ஏற்பாடு செய்யப்பட்டிருந் தது. இரவு 8 மணிக்குத் தொடங்கி 8.20 வரை எல்இடி திரையில் கந்த சஷ்டி கவசம் பாடல் ஒலிக்க, அதை மாநாட்டில் பங்கேற்றவர்கள் திரும்பப் பாடினர். மேடையில் அமர்ந்திருந்த ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை ஆகியோரும் மேடையில் அமர்ந்து பக்தி பரவசத்துடன் கந்த சஷ்டி கவசம் பாடினர்.
மாநாட்டு நிகழ்ச்சிகள் முழுவதும் உலகம் முழுவதும் முகநூல், எக்ஸ் வலைதளம், யூடியூப் வழியாக நேரலை செய்யப்பட்டது. முன்னதாக நேரலையில் மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்ப்போரும் கந்த சஷ்டி கவசம் பாடும் போது இணைந்து பாடுமாறு இந்து முன்னணி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதை யேற்று நேரலையில் மாநாட்டு நிகழ்ச்சிகளைப் பார்த்துக் கொண்டிருந்தோரும் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசம் பாடி பரவசமடைந்தனர்.
இந்நிலையில், முருக பக்தர்கள் மாநாட்டில் பாடப்பட்ட கந்த சஷ்டி கவசம் தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலை தளங்களில் செய்யப்பட்ட நேரலை வழியாக ஒரு கோடிக்கும் அதிகமானோ ரைச் சென்றடைந்திருப்பது தெரியவந் துள்ளது.