சேலம்: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் திராவிடம் குறித்த கருத்துகள் மற்றும் வீடியோவைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி. தினகரன் கூறினார். சேலத்தில் அமமுக செயல் வீரர்கள் கூட்டம், மாவட்டச் செயலாளர் எஸ்.கே.செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற டிடிவி.தினகரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக சார்பில் அழைப்பு விடுத்தனர். ஆனால், வேலை காரணமாக மாநாட்டுக்கு செல்லவில்லை. இந்த மாநாட்டில் திராவிடம் குறித்த கருத்துகள் மற்றும் வீடியோவைத் தவிர்த்திருக்க வேண்டும். இது வருத்தமளிப்பதாக உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சபை நாகரிகம் கருதி அங்கு அமைதியாக இருந்துள்ளனர். திமுக நிர்வாகிகளைகூட மாநாட்டுக்கு அழைத்துள்ளனர். அப்படி அழைத்துவிட்டு, அந்த வீடியோவை ஒளிபரப்பியதை ஏற்கமுடியாது. சட்டப்பேரவைத் தேர்தலில் சீட் பெறுவது தொடர்பாக தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுப்போம். திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. போதை கலாச்சாரம் அதிகரித்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் திமுக நிறைவேற்றவில்லை. விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. திமுகவுக்கு ஆதரவாக வரும் கருத்துக் கணிப்புகள், கருத்து திணிப்பாகவே உள்ளது. திமுக ஆட்சி மீது மக்கள் கோபத்தில் உள்ளதால், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும். இந்துக்கள் குறித்து இழிவாகப் பேசினால், மற்ற மதத்தினர் வாக்களிப்பர் என்று சிலர் கருதுகின்றனர். அது தவறானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.