சென்னை: மதுரையில் மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகி ஒத்துழைப்பு அளிக்குமாறு அவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தன. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பிறகு, மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்த பல்வேறு நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
இதில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, நிபந்தனைகளை மீறி, மத மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மதுரை சுப்பிரமணியபுரம் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு சம்மனும் அனுப்பினர்.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், போலீஸார் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய மறுத்துவிட்டார். போலீஸார் முன்பு ஹெச்.ராஜா ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, அவரது மனுவை தள்ளுபடி செய்தார்.