அனகாபுத்தூர்: தாம்பரம் – மதுரவாயல் புறவழிச்சாலையில் அனகாபுத்தூர் அருகே நேற்று இரவு இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் தந்தை, 8 மாத கர்ப்பிணியான மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தாம்பரம் அடுத்த சந்தோஷபுரம், மகாராஜபுரம் 1-வது குறுக்குத் தெருவை சேர்ந்தவர் பத்மநாபன் (65). இவர் நேற்று அம்பத்தூரில் உள்ள தனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தனது மனைவி இந்திராணி ( 51) மற்றும் எட்டு மாத கர்ப்பிணியான மகள் தீபிகா ( 23) ஆகியோருடன் சென்றிருந்தார். இந்நிலையில், நிகழ்ச்சியை முடித்து விட்டு நேற்று இரவு 11 மணி அளவில் மூன்று பேரும் அம்பத்தூரில் இருந்து கால் டாக்ஸி ஒன்றில் சந்தோஷபுரத்தில் உள்ள தங்களது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வண்டியை அம்பத்தூர், வெங்கடேஸ்வரா நகர் பகுதியை சேர்ந்த புவனேஷ் (23) என்பவர் ஓட்டினார். வண்டி தாம்பரம்- மதுரவாயல் புறவழிச்சாலையில் அனகாபுத்தூர் அடுத்த காமராஜபுரம் அருகே வந்த போது, எதிரே தவறான வழியில் வந்த மற்றொரு கார் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பத்மநாபன் வந்த கால் டாக்ஸி மீது பலமாக மோதியது. இரண்டு கார்களும் மோதிய வேகத்தில் சம்பவ இடத்திலேயே பத்மநாபன் உயிரிழந்தார்.
அவரது மனைவி இந்திராணி, எட்டு மாத கர்ப்பிணி மகள் தீபிகா மற்றும் கார் ஓட்டுநர் புவனேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீபிகாவை மீட்டு சிகிச்சைக்காக வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்திராணி மற்றும் டாக்ஸி ஓட்டுநர் புவனேஷ் ஆகியோர் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு இந்திராணிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் கந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், இறந்த பத்மநாபன் மற்றும் அவரது மகள் தீபிகா ஆகியோரின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, தவறான வழியில் எதிர் திசையில் வந்து விபத்து ஏற்படுத்திய விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, அன்னியூர், புது காலனி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரை கைது செய்தனர்.
ஓட்டுநரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக மது போதையில் வாகனத்தை இயக்கி, தவறான வழியில் நேரெதிர் திசையில் வந்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்தது. ஓட்டுநரை கைது செய்த போலீஸார், மருத்துவப் பரிசோதனை செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான 8 மாத கர்ப்பிணி பெண் தீபிகா சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.