சென்னை: திமுக ஐடி விங்குக்கு அதிமுக ஐடி விங் தக்க பதிலடி தராததால், அதன்மீது பழனிசாமி அதிருப்தியில் உள்ளார். இந்நிலையில் வரும் ஜூன் 27, 28-ம் தேதிகளில் ஐடி விங் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டத்தை பழனிசாமி கூட்டியுள்ளார்.
‘கீழடி விவகாரத்தில் தமிழக நலன் முக்கியமில்லை, பிரதமர் மோடியின் ஆதரவு போதும்’ என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கருதுவது போன்று பொருள்படும் வகையில், திமுக ஐடி விங் கடந்த வாரம் சமூக வலைத்தளங்களில் கேலி சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதைக் கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
அதேநேரம், இந்த விவகாரத்தில் அதிமுக ஐடி விங் தக்க பதிலடி கொடுக்காதது பழனிசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. 2026 தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், அதிமுக ஐடி விங் திருப்திகரமாக செயல்படாதது, பழனிசாமிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ஐடி விங் நிர்வாகிகள் கூட்டத்தை பழனிசாமி கூட்டியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவுறுத்தல்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வரும் ஜூன் 27-ம் தேதி காலை 10 மணிக்கு ஐடி விங் மாநில நிர்வாகிகள், மண்டல நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
28-ம் தேதி ஐடி விங் மாநிலச் செயலாளர், மண்டலச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டங்களில், தகவல் தொழில்நுட்பப் பிரிவின் (ஐடி விங்) செயல்பாடுகள் குறித்தும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிறுத்தி களப்பணி ஆற்றுவது குறித்தும், கருத்துப் பரிமாற்றமும், ஆலோசனையும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.