சிவகாசி: மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் முதல்வர் அண்ணாவை விமர்சித்ததை தவிர்த்து இருக்கலாம், அது வருத்தமளிக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரையில் நடைபெற்றதுதான் உண்மையான முருக பக்தர்கள் மாநாடு. ஆட்சியாளர்கள் அனைத்து மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். இந்து மத நம்பிக்கைகள் கொண்டோரை புண்படுத்துவதுதான் திமுகவின் வரலாறு.
குனிந்தவன் நிமிர்ந்தால் எதிரி காணாமல் போய்விடுவான். அதுபோல இன்று தமிழகத்தில் முருக பக்தர்களிடம் ஏற்பட்டுள்ள எழுச்சி திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதால், திமுக கூட்டணி கட்சியினர் மாநாட்டை விமர்சிக்கின்றனர்.
திமுக, விசிக கூட்டணி மனதளவில் முறிந்துவிட்ட நிலையில் பெயரளவிலேயே தொடர்ந்து வருகிறது. விசிக, மதிமுக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகள், திமுக மீது அதிருப்தியில் உள்ளன. முருக பக்தர்கள் மாநாட்டில் 99 சதவிகிதம் நல்ல நிகழ்வுகள் இருக்கும் நிலையில் ஒரு கருத்தை மட்டும் பேசி நல்ல கருத்துகளை புறந்தள்ள முடியாது.
அண்ணாவை வஞ்சிப்பது போன்று ஒரு செய்தி வந்துள்ளது வருத்தம் அளிக்கிறது. அதைத் தவிர்த்து இருக்கலாம். மறைந்த தலைவர்களின் நல்ல நினைவுகளை மட்டுமே பேசுவது சாலச் சிறந்தது. அன்றைய காலகட்டத்தில் அவர்கள் எடுத்த முடிவை இன்று விமர்சிப்பது தேவையற்றது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.