தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
சென்னை தியாகராய நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்வில், இத்திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நோய் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப காலத்திலேயே நோயை கண்டறிவது குறித்த விழிப்புணர்வு இல்லாததால்தான் பெரும்பாலான நோய்கள் ஏற்படுகின்றன. அதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 16,566 பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 50.76 லட்சம் மாணவர்களுக்கு தேசிய சிறார் நல திட்டம் மூலம் மருத்துவ அலுவலர்கள் 3 மாதத்துக்கு ஒருமுறை நோய் தடுப்பு குறித்து பயிற்சி வழங்குவார்கள். இந்த மாணவர்கள் சுகாதார துறையின் தூதர்களாக இருந்து, நோய்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், ஆரம்ப கட்டத்திலேயே நோய்களை கண்டறிவது குறித்து தங்கள் குடும்பத்தினரிடம் விரிவாக எடுத்துக் கூறுவார்கள். இதன்மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வளர்இளம் பருவத்தினருக்கு ஆரோக்கியம் – வாழ்க்கை திறன் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இதன்படி, பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ குழுக்கள், ஆலோசனை குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதன்மூலம் மனஅழுத்தம் போன்ற பாதிப்புகளில் இருந்து மாணவர்கள் விடுபடுவார்கள். தேசிய சிறார் திட்டத்தின்கீழ் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளி செல்லும் குழந்தைகளை பரிசோதிக்க 3 புதிய நடமாடும் மருத்துவ குழுக்களையும் அமைச்சர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில், எம்எல்ஏக்கள் த.வேலு (மயிலாப்பூர்), ஜெ.கருணாநிதி (தியாகராய நகர்), சுகாதார துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், பொது சுகாதாரம், நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், துணை இயக்குநர் நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.