சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஜூன் 28-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மறுபாடு காரணமாக இன்று (ஜூன் 23) முதல் 28-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும், நாளையும் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 2 செ.மீ., கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, சின்கோனா, வால்பாறை, திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, வேலூர் மாவட்டம் பொன்னை அணை ஆகிய இடங்களில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.