சென்னை: அந்நிய முதலீட்டில் தமிழகம் ஆமை வேகத்தில் உள்ளது. திமுக ஆட்சியில் முதலீடுகள் குறைகிறது என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் 2024-25 நிதியாண்டு தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவின் 51 சதவீத அந்நிய முதலீடுகளை மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் இணைந்து கைப்பற்றியுள்ளன. தமிழகம் வெறும் 3.68 பில்லியன் டாலருடன் 5-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது, மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தில் திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையை வெளிப்படுத்துகிறது.
மகாராஷ்டிரா (19.6 பில்லியன் டாலர்), கர்நாடகா (6.62 பில்லியன் டாலர்), டெல்லி (6 பில்லியன் டாலர்), குஜராத் (5.71 பில்லியன் டாலர்) என்று முதலீட்டு அரங்கில் முன்னிலை பெற்று, தமிழகத்தை பின்னுக்குத் தள்ளி உள்ளன. மகாராஷ்டிராவும், கர்நாடகாவும் உள்கட்டமைப்பு மேம்பாடு, முதலீட்டு நட்புக் கொள்கைகள் மற்றும் வணிகச் சூழலை மேம்படுத்தியதன் விளைவாக அந்நிய முதலீடுகளை கவர்ந்ததாகக் நிதி மேலாண்மை நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தமிழகத்தில் உள்கட்டமைப்பு தேக்கம், ஊழல், பல நிலைகளில் பேரம் பேசுவது, முதலீட்டாளர்களை ஈர்த்து தக்க வைப்பதற்கான கொள்கைகளை வகுக்காதது மற்றும் புதிய உத்திகளை மேற்கொள்ளாதது போன்றவை முதலீட்டாளர்களை மற்றும் முதலீடு ஈர்ப்பைத் தடுக்கின்றன என்பதே நிதர்சனமான உண்மை. 2024-25-ல் மொத்த அந்நிய முதலீடு 81.04 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இதில், தமிழகத்தின் பங்கு வெறும் 4.5 சதவீதம் மட்டுமே.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் மற்றும் உலக முதலீட்டாளர் மாநாடு போன்றவை வெற்று விளம்பரங்களாகவே மாறியுள்ளன. உண்மையில் கர்நாடகாவின் ஐடி மையங்களும், மகாராஷ்டிராவின் தொழில் மயமாக்கலும் முதலீட்டாளர்களைக் கவர்கின்றன. பிற மாநிலங்கள் சர்வதேச முதலீடுகளையும், தொழில் வளர்ச்சியையும் திறம்பட பயன்படுத்தி முன்னேறும்போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் மெத்தனமான மற்றும் அலட்சியமான ஆட்சியால் பின்தங்கி, பொருளாதார வாய்ப்புகளை இழந்து வருகிறது.
திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். 4 ஆண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் ஸ்டாலினின் சாதனை. அதனால், தமிழக மக்கள், 2026 சட்டப்பேரவை தேர்தலில், ஸ்டாலின் திமுகவுக்கு ‘தோல்வி’யை பரிசளித்து, அதிமுகவை ஆட்சியில் அமர்த்துவார்கள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.