சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை தவறாமல் செயல்படுத்தி, அவமதிப்பு வழக்கு தொடரப்படும் நிலையை உருவாக்கக் கூடாது என மின்வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிகாரிகளுக்கு வாரியத் தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த 20-ம் தேதி உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் நடைபெற்ற வழக்கில், “தொகையை திருப்பி செலுத்துதல் உள்ளிட்டவற்றில் வாரியம் மீண்டும் மீண்டும் நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாமல் இருக்கிறது.
அவமதிப்பு என்ற நிலை வந்த பிறகே உத்தரவுகளை செயல்படுத்துவதையும், அதன் பிறகும் உத்தரவை நிறைவேற்ற அவகாசம் கேட்பதையும் ஏற்க முடியாது. இதுபோன்றவற்றை விரைந்து சரி செய்வதோடு, வருங்காலங்களில் அனைத்து பிரச்சினைகளுக்கும் மின்வாரியத் தலைவரை எதிர்பார்க்க வேண்டிய சூழலை ஏற்படுத்தக் கூடாது” என தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து வழங்கப்பட்டுள்ள சில அறிவுறுத்தல்கள் விவரம்: அனைத்து அலுவலர்களுக்கும் தங்களது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவுகள், தீர்ப்புகள், அவமதிப்பு வழக்கு போன்றவற்றை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும். மேல்முறையீடு செய்யாத வழக்குகளில் உடனடியாக உத்தரவுகளை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு செயல்படுத்தாமல் இருந்து நீதிமன்ற அவமதிப்பு வரை செல்லும் நிலையை உருவாக்கி, உயரதிகாரிகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக் கூடாது.
அனைத்து உத்தரவுகளும் செயல்படுத்தப்பட்டதை உறுதி செய்து, ஜூன் 27-ம் தேதிக்குள் வாரிய சட்டப்பிரிவுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இவற்றை பின்பற்றி வாரிய நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அலுவலர்கள் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.