புதுச்சேரி: புகையிலை இல்லா இளைஞர் நலன் இயக்கம் 2.0-ஐ சிறப்பாக செயல்படுத்தியதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விருது வழங்கியுள்ளது.
இந்த விருதை பெற்ற புதுச்சேரி அரசு – சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் தேசிய புகையிலை கட்டுப்பாட்டு திட்ட அதிகாரி டாக்டர் கோவிந்த ராஜன், திட்டத்தின் மாநில முதன்மை அதிகாரி டாக்டர் வெங்கடேஷ் ஆகியோர் புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் அலுவலகத்தில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து விருது மற்றும் சான்றிதழைக் காண்பித்து இன்று வாழ்த்துப் பெற்றனர். அப்போது சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு ஆகியோர் உடன் இருந்தனர்.
விருது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், “2024-25-ம் ஆண்டில் புகையிலை இல்லா இளைஞர் நலன் இயக்கம் 2.0-இன் கீழ் கல்வி நிறுவனங்களின் அருகில் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக மஞ்சள் கோடு பிரச்சாரங்களை மேற்கொண்டோம். அத்துடன் கல்வி நிறுவனங்களை புகையிலை இல்லா கல்வி நிறுவனங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுத்தோம். காவல் துறையுடன் இணைந்து கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றனவா என்று சோதனை தீவிரமாக நடத்தினோம்.
மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 புதிய புகையிலைப் பழக்கம் மீட்பு மையங்களை நிறுவினோம். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து விழிப்புணர்வுப் பணிகளை சிறப்பாக மேற்கொண்டோம். இதற்காக புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது” என்று அதிகாரிகள் கூறினர்.