சென்னை: கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.488 கோடியில் குழந்தைகளுக்கான பிரத்யேக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. கட்டுமான பணியை முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்க உள்ளார் என்று சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.487.66 கோடியில் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு மற்றும் கட்டுமான பணிகள் குறித்து சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.450 கோடியில் அதிநவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. தினமும் இங்கு 2,000-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இந்த வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையில் ஆயிரக்கணக்கான முதியோர் சிகிச்சை பெற்று பயன்பெறுகின்றனர்.
இந்த வளாகத்தில் சுமார் 6.5 ஏக்கர் நில பரப்பில் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் குழந்தைகளுக்கான பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும் அமைய உள்ளது. கட்டுமான பணி மற்றும் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் பொருத்த ரூ.487.66 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கட்டுமான பணியை முதல்வர் ஸ்டாலின் வரும் செப்டம்பரில் தொடங்கி வைக்க உள்ளார். 2 ஆண்டுகளில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக நிர்வாகத்தில் இந்த மருத்துவமனை செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சுகாதார துறை செயலர் செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினீத், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி, பதிவாளர் சிவசங்கீதா, கிங் இன்ஸ்டிடியூட் இயக்குநர் இந்துமதி, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை இயக்குநர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.