மதுரை: இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தென் பாரதத் தலைவர் வன்னியராஜன் தெரிவித்தார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது: இந்து சமுதாய மனப்பான்மையில் மாற்றம் கொண்டுவரக் கூடிய மாநாடு இது. கூட்டு முயற்சியால் இம்மாநாடு வெற்றி பெற்றுள்ளது. பெரிய எண்ணிக்கையில் திரண்டுள்ளோம். இதன் மூலம் பெரிய மாற்றம் நிகழ்ந்துள்ளது.
உலகெங்கும் ஒரே குடும்பம் என கருதியது இந்து சமூகம். பெண்களைத் தாயாகப் போற்றக்கூடியது நமது பண்பாடு. நமது சமுதாயத்தில் தீண்டாமை என்பது மிகப்பெரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீண்டாமை ஏற்றத்தாழ்வு மண்ணில் இல்லாமல் போக வேண்டும்.
அதுதான் நமது குறிக்கோள். நமது கிராமங்களில் உள்ள பல கோயில்களில் பட்டியலினத்தவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதை மாற்ற வேண்டும். இந்து சமுதாயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். மயானம், நீர்நிலை பொதுவாக வேண்டும். தமிழகத்தில் மாற்றம் கொண்டு வருவதற்கான எழுச்சியை இந்த மாநாடு ஏற்படுத்தும். இவ்வாறு அவர் பேசினார்.