மண்டபம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்றபோது, நடுக்கடலில் படகு மூழ்கியதில் மாயமான மீனவரின் உடல், 3 நாட்களுக்குப் பிறகு கச்சத்தீவு கடல் பகுதியில் மீட்கப்பட்டது.
கடந்த 18-ம் தேதி காலை மண்டபத்தைச் சேர்ந்த சர்புதீன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, கடல் சீற்றம் காரணமாக படகின் அடிப்பகுதியில் உடைப்பு ஏற்பட்டு மூழ்கியது. இதில் படகின் ஓட்டுநர் இப்ராஹிம் ஷா (40) உள்ளிட்ட 4 மீனவர்கள் கடலில் குதித்து தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்கள், கடலில் தத்தளித்தவர்களில் 3 பேரை காப்பாற்றினர். ஆனால், இப்ராஹிம் ஷா மட்டும் மாயமானார்.
தீவிரமாக தேடப்பட்ட நிலையில், நேற்று மதியம் கச்சத்தீவு அருகே இறந்த நிலையில் இப்ராஹிம் ஷா உடல் மிதப்பதாக, அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில், மீனவர்களின் உறவினர்கள் படகில் சென்று உடலை மீட்டு, மெரைன் போலீஸார் உதவியுடன் மண்டபம் வடக்கு மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டுவந்தனர்.
பின்னர், இப்ராஹிம் ஷா உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு, உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதனையடுத்து, அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து மண்டபம் மெரைன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீனவர் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை இறந்த மீனவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக்கோரி மமக கட்சி மாநிலத் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.