புதுச்சேரி: எடப்பாடி பழனிச்சாமி கார்டூன் விவகாரத்தில் திமுகவைக் கண்டித்து புதுச்சேரியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்து கார்டூன் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைக் கண்டித்தும், திமுகவின் சமூக வலைதள பக்கங்களை உடனே முடக்கம் செய்ய வலியுறுத்தியும், திமுக அரசை குறைந்தபட்சம் 6 மாதத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் முடக்கம் செய்யக்கோரியும் புதுச்சேரியில் அதிமுகவினர் இன்று கண்டன ஆர்ப்பட்டம் நடத்தினர்.
பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுகவினர் பலர் கலந்து கொண்டு திமுகவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் அன்பழகன் பேசும்போது, ”பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள திமுக அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி கண்ட அரசாக உள்ளது. அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாது, தங்கு தடையின்றி போதை பொருள் விற்பனை, பாலியல் வன்முறைகள், கொலை கொள்ளை, சட்டம் ஒழுங்கு சீர்குலைவு ஊழல் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் மக்கள் பயம் கலந்த பீதியுடன் வாழும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திமுக முதல்வர் ஸ்டாலினின், தவறுகளை ஆதாரப்பூர்வமாக எங்களது பொதுச்செயலாளர் பழனிச்சாமி மக்களிடம் தினந்தோறும் எடுத்துரைத்து வருகிறார்.
அவருடைய ஆணித்ரமான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க திராணியற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது கட்சியினரை வைத்து பழனிச்சாமியை விமர்சித்து கார்ட்டூன்களை வெளியிட்டு அற்ப அரசியல் செய்கிறார். இதுபோன்ற வக்கிரத்தனமான வெளியீடுகள் என்பது ஸ்டாலினின் வக்கிர புத்திக்கு எடுத்துக்காட்டாகும். ஜனநாயகத்தில் விமர்சனங்களை எதிர்கொள்ள திராணியற்ற திமுக முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் சட்டத்துக்கு விரோதமான ஒன்றாகும்.
டாஸ்மாக் நிர்வாகத்தில் அமலாக்கப்பிரிவு உரிய நடவடிக்கை எடுத்தவுடன் டெல்லிக்கு பிரதமரை சந்தித்து காலில் விழுந்து டாஸ்மாக் பிரச்சனைகளில் இருந்து தானும், தனது குடும்பத்தினரையும் விடுவித்ததை மறந்துவிட்டு எங்களது பொதுச்செயலாளரை தரம் தாழ்ந்து சித்தரித்துள்ளார். திமுகவை எதிர்ப்பவர்களை திமுக அரசு காவல்துறையினர்களை ஏவிவிட்டு அடக்கு முறையை கையாண்டு வருகின்றனர். ஆனால் அந்த திமுகவினரே மற்ற கட்சிகளை அவதூறாக சித்தரித்து வருவது எந்த விதத்தில் நியாயம்” என தெரிவித்தார்.