முருகனின் அறுபடை வீடுகளில் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் மூன்றாவது படை வீடாகும். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலில் மூலவர் நவபாஷானத்தால் ஆனவர். போகர் என்ற சித்தர், இந்த மூலவரை பிரதிஷ்டை செய்துள்ளார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
குறிப்பாக, தைப்பூச திருவிழாவின்போது லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். பழநி முருகன் மலைக்கோயில் தரைமட்டத்தில் இருந்து 450 அடி உயரத்தில் உள்ளது. பக்தர்கள் 693 படிகளை கடந்துதான் பழநி மலைக்கோயிலுக்கு செல்ல வேண்டும்.
ஆரம்ப காலத்தில் பழநி மலைக்கோயிலுக்கு முறையான படி வசதி இல்லாத சூழலில் கரடுமுரடான பாதையில் நடந்தே ஏறிச் செல்லும் நிலை இருந்தது. சிலர் மலைக்கோயிலுக்கு செல்ல இயலாமல் அடிவாரத்தில் இருந்தே முருகனை பலர் வேண்டிச் செல்லும் நிலைதான் இருந்தது. காலப்போக்கில் முருகனின் அருள் பெற வரும் பக்தர்களின் வருகை மெல்ல அதிகரித்தது. அப்போது, பாறைகளை செதுக்கி தற்காலிகமாக பாதைகள் அமைக்கப்பட்டன. பின்னர், 1930-ம் ஆண்டில் இருந்து பக்தர்களின் உதவியுடன் கற்கள் மூலம் படிக்கட்டுகள் அமைக்க தொடங்கினர்.
நன்கொடையாக வழங்கிய படிகள்: முருக பக்தர்கள் கல்லால் ஆன படிகளை நன்கொடையாக வாரி வழங்கினர். தனிநபராகவும், ஒரு சமூகமாகவும் மற்றும் பக்தர்கள் குழுவாக சேர்ந்தும் 5, 10, 11, 21, 51 என்ற எண்ணிக்கையில் தங்கள் சக்திக்கு ஏற்ப படிக்கட்டுகளை அமைத்து கொடுத்தனர். அடிவாரத்தில் இருந்து மலைக்கோயில் வரை மொத்தம் 689 படிகள் பக்தர்கள் மூலமாகவும், அதற்கு மேல் 4 படிகள் தேவஸ்தானம் மூலமாகவும் என மொத்தம் 693 படிகள் அமைக்கப்பட்டன. இந்த படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு, தற்போது 95 ஆண்டுகள் ஆகின்றன.

படிகள் அமைத்து கொடுத்த நன்கொடையாளர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் கல்வெட்டுகளில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் பார்க்க முடியும். படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட பிறகு பழநி மலைக்கு படையெடுத்து வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இளையோர் முதல் முதியோர் வரை பழநி மலையில் ஏறி மகிழ்ச்சி பொங்க, மனம் குளிர தண்டாயுதபாணியை தரிசித்து வருகின்றனர்.
தற்போது மலைக்கோயிலுக்கு எளிதில் செல்ல ரோப் கார், வின்ச் ரயில் வசதி இருந்தாலும் படிப்பாதை வழியாக நடந்து சென்று முருகனை தரிசிப்பவர்களே அதிகம். பழநி மலையில் ஏறி இறங்கினால் தீராத வினைகள் எல்லாம் தீர்ந்து போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
யானை பாதை: பழநி் மலைக்கோயிலுக்கு செல்ல படிப்பாதை அமைக்கப்பட்ட பிறகு, மலைக்கோயிலுக்கு கட்டுமானப் பொருட்கள், பூஜை பொருட்கள் எடுத்துச் செல்லவும், பக்தர்கள் நடந்து செல்லவும் பயன்படுத்தி வந்த பாதையை மலைக்கோயிலில் இருந்து சிறிது தொலைவுக்கு படிப்பாதை வரை அகலப்படுத்தினர். காலப்போக்கில் படி ஏறவும், இறங்கவும் சிரமப்படும் பக்தர்களின் வசதிக்காக அந்த பாதையை மலையடிவாரம் வரை நீட்டித்து சாய்வுதள பாதை போல் அமைத்தனர். அந்த பாதைதான் தற்போது ‘யானைப் பாதை’ என்று அழைக்கப்படுகிறது.
தற்போது செங்குத்தான மற்றும் ஏற்றமான இடங்களில் யானை பாதையில் கல்லால் ஆன படிகள் அமைக்கட்டுள்ளன. ஆண்டு முழுவதும் பெரியநாயகி அம்மன் கோயிலில் இருக்கும் யானை கஸ்துாரி, கந்தசஷ்டி திருவிழாவுக்காக மட்டுமே மலைக்கோயிலில் தங்கியிருக்கும். அதற்காக, யானைப் பாதை வழியாகவே யானை கஸ்தூரியை அழைத்துச் செல்வது குறிப்பிடத்தக்கது.