மதுரை: “முருக பக்தராக மதுரைக்கு வருகை தரும் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை திமுக ஆதரிக்க வேண்டும்,” என நடிகை கஸ்தூரி கூறினார்.
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க வந்த நடிகை கஸ்தூரி, மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று (ஜூன் 22) வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “மதுரையில் நடக்கும் மாநாடு அரசியல் விழா அல்ல. தமிழ்க்கடவுள் முருகனை போற்றும் மாநாடு. கும்பாபிஷேகம், முருகன் மாநாடு நடத்துவதெல்லாம் அரசியல் இல்லை. மக்கள் ஒன்று கூடி மாநாடு நடத்தினால் அரசியல் ஆதாயம் தேடுவது என்று அர்த்தமில்லை. மாமியார் உடைத்தால் மண் சட்டி, மருமகள் உடைத்தால் பொன் சட்டியா?
திமுக நடத்திய முருக பக்தர்கள் மாநாடும் சிறப்பாக நடந்தது. மக்களின் எழுச்சியுடன் இம்மாநாடு அமைந்திருக்கிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கட்சித் தலைவராக வரவில்லை. முருக பக்தராக வருவது பெருமை. இதை திமுக அரசு ஆதரிக்க வேண்டும். சனாதனத்தை ஒழிப்போம் என, சொல்வது தான் அக்மார்க் மதவாதம். முருகனை போற்றுவோம் என்று சொல்வது ஆன்மிகம். முருக பக்தர்கள் மாநாட்டில் அதிகமான மத நல்லிணக்கத்தை நீங்கள் பார்க்கப்போகிறீர்கள்.
முருக பக்தர்கள் என சொல்லி மதவாதம் செய்கிறார்கள் என இயக்குநர் அமீர் கருத்து கூறியுள்ளார். மாற்று மதத்தினர் தேவையின்றி சொற்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். முருகன் தமிழ்க்கடவுள் தானே. அவருடைய மூதாதையர்கள் தமிழர்கள் தானே? அவர் தமிழனாக நினைக்கவில்லையா? என தெரியவில்லை. மதுரையில் மாற்று மதத்தினர் அரணாக நிற்க வேண்டும். சுல்தான் கூட கோயிலுக்கு நற்பணி செய்ததாக வரலாறு உள்ளது.
விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒரு இடத்தில் தான் நடக்க வேண்டும் என்பது இல்லை. எங்களுடைய ஒவ்வொரு மனதிலும் நடக்கிறது. ‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்’ விஜய் மீதான அன்பு குட்டி விதிமுறையால் குறைந்து விடாது. விஜய் சரியான பாதையில் பயணிக்கிறார். வெற்றி என்பது கட்சியின் பெயரில் உள்ளது. இதை வாழ்த்தாக தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அவர் கூறினார்.