விக்ரம் நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘சேது’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் ‘சேது’. இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. மேலும் பல்வேறு மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் குவித்தது. தற்போது இப்படத்தினை புதிய பொலிவுடன் மாற்றி மறுவெளியீடு செய்யவுள்ளது படக்குழு.
‘சேது’ படத்தினை தரம் உயர்த்தும் பணிகள் முழுவீச்சில் தொடங்கப்பட்டுள்ளன. டிசம்பர் 10-ம் தேதி இப்படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு விக்ரம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், இதனை விமரிசையாக கொண்டாட விக்ரம் ரசிகர்கள் திட்டமிட்டு இருக்கிறார்கள்.
கந்தசாமி தயாரிப்பில் பாலா இயக்குநராக அறிமுகமான படம் ‘சேது’. இதில் விக்ரம், சிவகுமார், அபிதா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஒளிப்பதிவாளராக ரத்னவேலு, இசையமைப்பாளராக இளையராஜா ஆகியோர் பணிபுரிந்திருந்தார்கள். இப்படம் முதலில் பெரிதாக கொண்டாடப்படவில்லை. பின்பு ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி மறுவெளியீடு செய்த போது கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.