புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஊழல் அதிகாரிகளையும், ஆட்சியாளர்களையும் சிறையில் தள்ளுவோம் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்தாமல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்குப் பதிலாக தமிழக பாடத்திட்டத்தையே புதுச்சேரியில் அமல்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, ”ஆங்கிலத்துக்கு எதிரான மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்து இந்திய மக்கள் முன்னேற்றக்கூடாது என்பதற்கானது. அமித் ஷா வேண்டுமென்றே மொழியின் பெயரால் கருத்து வேறுபாடுகளை மாநிலங்களில் உருவாக்கும் வகையில் தேவையில்லாமல் பேசியுள்ளார். புதுச்சேரியில் வரும் 2026ல் காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைத்தால் ஹிந்தி மொழி கட்டாயம் என்பதை நீக்குவோம்.
புதிய கல்விக் கொள்கையை தமிழகம் போல் செயல்படுத்தமாட்டோம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்துக்கு பதிலாக தமிழக கல்வித்திட்டத்தை பின்பற்றுவோம். புதுச்சேரி அரசின் ஊழல் சம்பந்தமான ஆதாரங்களை நிறைய தேடி எடுத்து வைத்துள்ளோம். ரேஷன் அரிசியில் மட்டும் மாதம் 2 கோடி ரூபாய் லஞ்சம் ஆட்சியாளர்களுக்கு செல்கிறது. ஊழல் பட்டியலை இறுதி செய்து வைத்துக்கொண்டு குடியரசு தலைவரை வரும் ஆகஸ்ட்டுக்குள் சந்தித்து மனு அளிப்போம்.
நாங்கள் ஆட்சியில் அமர்ந்த பிறகு 2026-ல் ஊழல் செய்யும் அதிகாரிகளை நிச்சயம் சிறையில் தள்ளுவோம். ஊழல் செய்த ஆட்சியாளர்களும் சிறைக்கு செல்வார்கள். ஊழல் அனைத்து துறைகளுக்கும் வர ஆட்சியாளர்களில் முதல்வர், அமைச்சர்கள்தான் காரணம். ஊழல் தொடர்பாக விசாரணையும் அமைப்போம். பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. அதன் பின்னணிதான் முருகபக்தர் மாநாடு.
எல்லாரும் முருக பக்தர்கள்தான். நானும் முருக பக்தர்தான். முருகனுக்கு விழா நடத்தலாம். முருக பக்தர் மாநாடு என அரசியல் லாபம் தேட பாஜக முயற்சி செய்கிறது. அதன் பின்னணியில் ஆர்எஸ்எஸ் இருக்கிறது. தமிழக மக்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ்சின் சூழ்ச்சி வலையில் விழ மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.