சென்னை: வரும் 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக நிர்வாகிகளுடன் தனித்தனியே ஆலோசனை நடத்த ஜூலை 8-ம் தேதி அமித் ஷா சென்னை வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கிறது. தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தங்களை தயார்ப்படுத்தி வருகின்றன. அந்தவகையில், தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்ற இலக்குடன் தமிழக பாஜகவும் தீவிர களப்பணியாற்றி வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமித் ஷா, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்.
அதைத்தொடர்ந்து, கடந்த 8-ம் தேதி மதுரையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமித் ஷா பங்கேற்றார். கூட்டத்தில், தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும். கூட்டணி கட்சிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதை ஆய்வு செய்வதற்காக அடிக்கடி தமிழகம் வருவேன் என அமித் ஷா கூறியிருந்தார்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், நயினார் நாகேந்திரன் நேற்று முன்தினம், ‘சட்டப்பேரவை தேர்தல் முடியும் வரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அடிக்கடி இனி தமிழகம் வருவார்,’ என்று தெரிவித்திருந்தார். அந்தவகையில், ஜூலை மாதம் 8-ம் தேதி அமித் ஷா சென்னை வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்போது, தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பாஜக மூத்த நிர்வாகிகளை தனித்தனியே சந்தித்து கருத்துகள் கேட்க இருக்கிறார். தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோரை சந்திக்க இருப்பதாகவும், கூட்டணி குறித்து பேச இருப்பதாகவும் தெரிகிறது. நிர்வாகிகள் கூட்டம் முடிவில் கூட்டணி குறித்த மேலும் சில அறிவிப்புகள் வெளியாகலாம் எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
அமித் ஷா சென்னை வருகையின்போது, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உட்பட இன்னும் பல கட்சி தலைவர்கள் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது.