மூலவர்: போக சயன ரங்கநாதர் அம்பாள்: ரங்கநாயகி தல வரலாறு : சாளுக்கிய மன்னர் தென்னிந்தியாவின் மீது படையெடுத்து வந்த போது ஸ்ரீரங்கத்தில் உள்ள பெருமாளின் அழகில் மயங்கிஅதைபோல் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று நினைத்தார். ஒரு விவசாயி அறுவடை முடிந்து கதிரடிக்கப்பட்டு நெல் மணிகளை மரக்கால் கொண்டு அளந்து கொண்டிருந்தார். அரசர் பார்க்கும்போது, திடீரென அவர் மறைந்தார். மன்னர் அவரை தேடியபோது, விவசாயி (பெருமாள்) மரக்காலை தலைக்கு வைத்து ஓரிடத்தில் படுத்து,சயன கோலத்தில் மன்னருக்கு காட்சியளித்து மறைந்தார். அதை பார்த்த மகிழ்ச்சியில் மன்னர் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயில் போலவே இங்கும் ஒரு பெருமாள் கோயில் கட்டினான். இது வட ஸ்ரீரங்கம் என்று அழைக்கப்படுகிறது.
சிறப்பு அம்சம்: பதினெட்டரை அடி நீளமும் ஐந்தடி உயரமும் கொண்டு வசீகரத் தோற்றத்துடன் ஐந்து தலை ஆதிசேஷன் மீது இறைவன் வலது கையை தலைக்கு கீழே வைத்துஇடது கையை முன்னோக்கி நீட்டியவாறு, கிழக்கு பார்க்க திருமுகம் கொண்டவாறு சயனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பெருமாளின் திருமேனி முழுவதும் சாளக்கிராமக் கலவையால் உருவாக்கப்பட்டுள்ளது. உறங்கும் இறைவனின் நகைகள் கூட ரங்கநாதர் கோயில்களில் உள்ளது போன்று ஒரே மாதிரியான சாளக்கிராமக் கல்லால் செய்யப்பட்டவை. இந்த கிராமம் தேவர்களால் வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது, எனவே இது தேவதானம் என்று அழைக்கப்பட்டது.
பிரார்த்தனை: ஏழு சனிக்கிழமைகளில் தொடர்ந்து நெய் தீபம் ஏற்றி பெருமாளையும், புற்றில் உள்ள நாகராஜனையும் வழிபட்டு வந்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் உடனடி வேலை வாய்ப்பு கிடைக்கும். திருமணத் தடைகள் விலகும் என்பது ஐதீகம். அமைவிடம்: சென்னை மீஞ்சூரில் இருந்து 6 கிமீ தொலைவிலும், அனுப்பம்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து 3 கிமீ தொலைவிலும் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம் : காலை 6.30-12.00, மாலை 4-8.