சென்னை: உயர்கல்வி துறை சார்பில் கே.வி.குப்பம், துறையூர், உளுந்தூர்பேட்டை, செங்கம் ஆகிய 4 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இக்கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டு முதலே செயல்படும்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவையில் 2025-26-ம் ஆண்டுக்கான உயர்கல்வி துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை மாவட்டம் ஆலந்தூர், செங்கல்பட்டு – செய்யூர், விழுப்புரம் – விக்கிரவாண்டி, கடலூர் – பண்ருட்டி, பெரம்பலூர் – கொளக்காநத்தம், தஞ்சாவூர் – திருவிடைமருதூர், திருவாரூர் – முத்துப்பேட்டை, நீலகிரி – குன்னூர், திண்டுக்கல் – நத்தம், சிவகங்கை – மானாமதுரை, தூத்துக்குடி – ஓட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 26-ம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இந்த கல்லூரிகள் இந்த கல்வி ஆண்டு முதல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, உயர்கல்வி துறை சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி – துறையூர், கள்ளக்குறிச்சி – உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை – செங்கம் ஆகிய இடங்களில் கூடுதலாக 4 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கடந்த மே 3-ம் தேதி அறிவித்தார். இந்த புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தலா 5 பாடப் பிரிவுகள்: 4 கல்லூரிகளும் தலா 5 பாடப் பிரிவுகளுடன் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான தொடர் மற்றும் தொடரா செலவினத்துக்காக ரூ.8.67 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதலே 4 கல்லூரிகளும் செயல்படும். இதன்மூலம், இப்பகுதிகளில் உள்ள சுமார் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பயிலும் வாய்ப்பை பெறுவார்கள். தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகள் எண்ணிக்கை தற்போது 180 ஆக அதிகரித்துள்ளது.
வேலூர் மாவட்டம் சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ரூ.18.74 கோடியில் 5 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கல்விசார் கட்டிடம், ரூ.2.39 கோடியில் கட்டப்பட்டுள்ள துணைவேந்தர் குடியிருப்பு, ரூ.8.49 கோடியில் உதவி பேராசிரியர்கள் குடியிருப்புகள், ரூ.6.56 கோடியில் இதர பணியாளர்களுக்கான குடியிருப்புகள் என மொத்தம் ரூ.36.18 கோடியிலான கட்டிடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கோவி.செழியன், எ.வ.வேலு, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உயர்கல்வி துறை செயலர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.